முகப்பு
இந்தியா

காங்கிரஸ் எம்எல்ஏக்களை தலா ரூ.15 கோடிக்கு வாங்க பாஜக குதிரை பேரம்

காங்கிரஸ் எம் எல்ஏக்களை தலா ரூ.15 கோடி கொடுத்து வாங்குவதற்கான குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

காங்கிரஸ் எம் எல்ஏக்களை தலா ரூ.15 கோடி கொடுத்து வாங்குவதற்கான குதிரை பேரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கோஹில் தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாஜகவின் ஆட்சியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிப் பூசல் எதுவுமில்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்.

ஆனால், மாநிலங்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக தனது கட்சிக்கு இழுத்து வருகிறது. மிகவும் இக்கட்டான நிலையில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் கடமை ஊடகங்களுக்கும் உள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பெங்களூருக்கு வந்துள்ளனர். யாரையும் கட்டாயப்படுத்தி இங்கு அழைத்து வரவில்லை. மேலும், சொகுசாக இருக்க வேண்டுமென்றால், பிற நாடுகளுக்குச் சென்றிருப்போம். பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து தப்பிக்கவே பெங்களூருக்கு வந்துள்ளோம். எங்களை வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரு குடும்பத்தைப் போல இங்கு தங்கியிருக்கிறோம்.

குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அறிந்திருக்கிறோம். வெள்ளம் சம்பந்தமான புகைப்படங்களை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியவில்லையே என்ற வருத்தம் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு உள்ளது. ஆனால், பாஜகவின் குதிரை பேரத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள எங்கள் எம்எல்ஏக்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

காங்கிரஸ் எம்எல்ஏக்களை தலா ரூ.15 கோடி கொடுத்து வாங்கி, பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது. 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இதுபோன்ற ஆசை வார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள். பண பலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக சதித் திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் 6 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். எஞ்சியுள்ள 51 எம்எல்ஏக்கள் தவிர, வேறு சிலரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களுக்கு 60 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →