முகப்பு
இந்தியா

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தம் வசம் இழுக்க பாஜக தலைவர்கள் பெங்களூரு வருகை

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தம் வசம் இழுக்க, அம் மாநிலத்தின் பாஜக தலைவர்கள் பெங்களூருக்கு வருகை தந்து, முகாமிட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தம் வசம் இழுக்க, அம் மாநிலத்தின் பாஜக தலைவர்கள் பெங்களூருக்கு வருகை தந்து, முகாமிட்டுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவைக்கு நடைபெறும் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்கத் திட்டமிட்டுள்ள பாஜக, அம் மாநிலத்தின் காங்கிரஸ் வேட்பாளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க தொடர் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 57-பேரில் 6 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் பல எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவின் வலைவீச்சில் இருந்து தப்பிப்பதற்காக, குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்களை அக் கட்சியின் மேலிடம் பெங்களூருக்கு அழைத்து வந்து, ராமநகரில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது. இதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களை பெங்களூரில் சொகுசாக தங்க வைத்திருப்பது சரியல்ல என்று பாஜக தெரிவித்திருந்தது. இதனிடையே, மேலும் பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்களும் ஊடகத்தின் முன் தோன்றி, தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், எங்களை யாரும் பிரிக்க முடியாது என்றும் கூறியிருந்தனர். மேலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சக்திசிங் கோஹில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.15 கோடி தருவதாக பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட்டு வருகிறது என குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநில பாஜகவைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் கொண்ட குழு ஒன்று பெங்களூருக்கு திங்கள்கிழமை வந்திருக்கிறது. இக் குழுவினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒற்றுமையைக் குலைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றிருக்கும் கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், எம்.பி. டி.கே.சுரேஷ் ஆகியோர், பாஜகவின் திட்டத்தை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளனர். பாஜகவினரின் கண்ணில் இருந்து தப்பிக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராமநகரில் இருந்து மடிக்கேரிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மடிக்கேரியில் உள்ள சொகுசு ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மடிக்கேரிக்கு செவ்வாய்க்கிழமை அவர்கள் அழைத்துச் செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →