முகப்பு
இந்தியா

போதிய எம்எல்ஏக்கள் இல்லாமல் 3-ஆவது வேட்பாளரை பாஜக நிறுத்தியது ஏன்?

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் 2 எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் அளவுக்கு மட்டுமே பாஜகவிடம் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 3-ஆவது வேட்பாளரை நிறுத்தியது ஏன்?

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:33 PM
பகிர்:

குஜராத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் 2 எம்.பி.க்களைத் தேர்வு செய்யும் அளவுக்கு மட்டுமே பாஜகவிடம் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 3-ஆவது வேட்பாளரை நிறுத்தியது ஏன்? என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குலாம் நபி ஆசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் விரைவில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவியிடங்களுக்கு ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகி பாஜகவில் சில நாள்களுக்கு முன்பு இணைந்த பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மீண்டும் களமிறங்குகிறார்.
மொத்தம் 182 எம்எல்ஏக்கள் உள்ள குஜராத் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், கடந்த சில நாள்களில் 6 பேர் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இதில் பலர் பாஜகவில் ஐக்கியமாயினர். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 51-ஆக குறைந்துவிட்டது.
அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் அவரை தங்கள் முதல் தேர்வாக குறிப்பிட வேண்டும். காங்கிரஸின் இப்போதைய பலத்தில் இது எளிதானதுதான். ஆனால், மேலும் பல எம்எல்ஏக்களை பாஜக இழுத்துவிடும் என்ற காரணத்தில் 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு அருகேயுள்ள விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, தில்லியில் செய்தியாளர்களிடம் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
குஜராத்தில் மொத்தம் 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்குத்தான் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தங்களிடம் உள்ள எம்எல்ஏக்களை வைத்து இருவரை மட்டுமே வெற்றி பெற வைக்க முடியும் என்பது பாஜகவுக்கு நன்றாகத் தெரியும். எனினும், 3 வேட்பாளர்களை அவர்கள் நிறுத்தியது ஏன்?
குறுக்கு வழியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களைத் திருடி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற பாஜகவின் நோக்கம் இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்துவிட வேண்டுமென்று பல்வேறு சதிகளை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
எங்கள் வேட்பாளர் அகமது படேலுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது. எனவே, கூடுதல் வாக்குகள் பெற்று மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்படுவார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் என்ற முறையில் அகமது படேல், தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
மழையால் பாதிப்பு: குஜராத் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவாமல், எங்கள் எம்எல்ஏக்களை பெங்களூரில் வைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். இது மக்கள் மீதான பாஜகவின் அக்கறையல்ல. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரும்பி வந்தால் அவர்களை எப்படியாவது விலை பேசிவிடலாம் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
குஜராத் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த இரு மாதங்களாக கனமழை, வெள்ளத்தால் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை. வடகிழக்கு மாநிலங்களை அரசியலுக்காக மட்டும் பாஜக பயன்படுத்துகிறது என்றார் குலாம் நபி ஆஸாத்.

முழு கட்டுரையைப் படிக்க →