சத்தீஸ்கர்: 15 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை: மேலும் 2 பேர் கைது
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 15 நக்ஸலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 15 நக்ஸலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பெண் உள்ளிட்ட 2 நக்ஸலைட் தீவிரவாதிகள் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து நக்ஸலைட் தீவிரவாதிகள் ஒழிப்பு படை சிறப்பு டைரக்டர் ஜெனரல் டி.எம். அவஸ்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுக்மா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் நக்ஸலைட் தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, நக்ஸலைட் முகாமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட இடத்தை 2 பக்கங்களில் இருந்தும் இரு குழுக்களாக பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். ஒவ்வொரு குழுவிலும் மாவட்ட ரிசர்வ் படை, சிறப்பு அதிரடிப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, கோப்ரா படை ஆகியவற்றைச் சேர்ந்த தலா 200 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
இதில் ஒரு குழு, நல்கடோங் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நக்ஸலைட்டுகள் முகாமிட்டிருப்பதை திங்கள்கிழமை அதிகாலை கண்டுபிடித்தது. இதைத் தொடர்ந்து, அந்த குழுவினர் அளித்த தகவலின்பேரில், நக்ஸலைட் தீவிரவாதிகள் முகாம் இருபக்கமும் சுற்றிவளைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நக்ஸலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டை சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
இந்த சண்டையின் முடிவில், அப்பகுதிக்கு பாதுகாப்புப் படையினர் சென்று பார்த்தபோது, சண்டையில் கொல்லப்பட்ட 15 நக்ஸலைட்டுகளின் சடலங்கள் கிடந்ததை கண்டனர். மேலும், நக்ஸலைட்டுகளின் சடலங்கள் அருகே துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கிடந்தன. கொல்லப்பட்ட 15 நக்ஸலைட்டுகளில், நக்ஸலைட்டு தளபதியாக செயல்பட்டு வந்த வஞ்சன் ஹங்காவும் ஒருவர்.
எஞ்சிய 14 நக்ஸலைட்டுகளின் அடையாளம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சண்டையில் ஒரு பெண் நக்ஸலைட்டு உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட 15 நக்ஸலைட்டுகளும், சுக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் கோண்டா, கோலபள்ளி, பெஜ்ஜி ஆகிய இடங்களில் தனித்தனி குழுவினராக செயல்பட்டு வந்தவர்கள்.
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இந்த சம்பவமும் ஒன்றாகும்.
இதேபோல், பெஜ்ஜியில் உள்ள வனப்பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையின் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.
இந்த 15 நக்ஸலைட் தீவிரவாதிகளையும் சேர்த்து, சத்தீஸ்கரில் நிகழாண்டில் இதுவரை 86 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று டி.எம். அஸ்வதி தெரிவித்தார்.
முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பெண்கள் உள்ளிட்ட 8 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.