இறையாண்மையை மதிக்கவும்: சுட்டுரை நிறுவனத்துக்கு இந்தியா எச்சரிக்கை
இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் விடுவது ஏற்றுக் கொள்ள இயலாது என்று டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸிக்கு மத்திய அரசு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
புது தில்லி: இந்திய இறையாண்மையை மதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாமல் விடுவது ஏற்றுக் கொள்ள இயலாது என்று டிவிட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸிக்கு மத்திய அரசு காட்டமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இந்திய வரைபடத்தின் தவறான புகைப்படத்தை வெளியிட்டதற்காக, சுட்டுரை நிர்வாகத்துக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, சுட்டுரையில் (டிவிட்டர் பக்கம்) ஜம்மு காஷ்மீரின் லேஹ் பகுதியை சீனாவுடையது என்பது போன்ற வரைபடம் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் சாவ்னே எழுதியிருக்கும் கடிதத்தில், மிகக் காட்டமான வார்த்தைப் பயன்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டு, நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அவமரியாதை செய்வது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இதுபோன்ற நடவடிக்கைகள் சுட்டுரையின் மீதான மரியாதையைக் குறைப்பது மட்டுமல்லாமல், அதன் நடுநிலைமை, நேர்மை போன்றவற்றின் மீதும் சந்தேகக் கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.