புது தில்லி: மருத்துவமனைகளில் இருப்பு வைத்திருக்கும் கரோனா தடுப்பூசிகள் வீணாக்க விட வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தலை அனுப்பியுள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் அனுப்பியிருக்கும் அறிவுறுத்தல் கடிதத்தில், சில மாநிலங்களில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் அல்லது தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் இருக்கும் தடுப்பூசி மருந்துகள் விரைவில் காலாவதியாகவிருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சித்ரா ராமகிருஷ்ணா விற்பனை செய்த சென்னை பங்களா: அதுவும் எப்போது, யாருக்குத் தெரியுமா?
இதற்கு முன்பும் கூட, இது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய அரசு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு அதாவது, மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிர மாநில அரசுகளுக்கு இதுபோன்றதொரு கடிதத்தை அனுப்பியிருந்தது. இந்தக் கடிதமானது கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனுப்பப்பட்டிருக்கும் அறிவுறுத்தலில், தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில், விரைவில் காலாவதியாகும் மருந்துகளும், அரசு தடுப்பூசி மையங்களில் காலாவதியாக அதிக நாள்களைக் கொண்ட மருந்துகளும் இருப்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தனியார் தடுப்பூசி மையங்களிலும், அரசு தடுப்பூசி மையங்களிலும் எந்த வகையிலும் கரோனா தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை பயன்படுத்தாத 15.19 கோடி கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.