இந்தியா

தில்லி அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புகிறேன்: அரவிந்த் கேஜரிவால்

DIN

தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை உலகின் சிறந்த பள்ளிகளாக மாற்ற விரும்புவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டில் தலை சிறந்த பள்ளிகள் இருந்தால் தான் வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் இந்தியாவுக்கு கல்வி பயில வருவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு பயிற்சிக்காக சென்றிருந்த ஆசிரியர்களிடத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். அவர்களுக்கு தில்லி அரசின் ஆதரவும், நாட்டு மக்களின் ஆதரவும் இருக்கிறது. சிலர் இதனை அரசுக்கு ஏற்படும் செலவு என நினைக்கலாம். ஆனால், இது செலவு அல்ல ஒரு விதமான முதலீடு. ஆசிரியர்களை பயிற்சிக்காக வெளிநாடு அனுப்புவதால் உங்களால் நான்கு பாலங்களோ அல்லது நான்கு சாலைகளோ குறைவாக உருவாக்க முடியும். ஆனால், நாம் ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள். அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் பாலங்களையும், சாலைகளையும் உருவாக்குவார்கள்.

சிலர் பொறாமையினால் எங்களது நல்ல முயற்சிகளை கெடுக்க நினைக்கிறார்கள். நான் கட்சி சார்ந்த அரசியல் செய்ய விரும்பவில்லை. நாட்டில் கல்வியை மேம்படுத்த பாஜகவைச் சேர்ந்தவர்களோ அல்லது காங்கிரஸைச் சேர்ந்தவர்களோ விரும்பினால் அவர்களுக்கு மணிஷ் சிசோடியாவை சில நாட்களுக்கு கடனாக தருகிறேன். நாங்கள் நாடு முழுவதும் கல்வியில் மேம்பாட்டை கொண்டுவர விரும்புகிறோம். எங்களது அரசு ஆசிரியர்களுக்கு சிறந்த தரமான பயிற்சியை வழங்க விரும்புகிறது. நாம் சர்வதேச அளவில் உள்ள பள்ளிகளுடன் போட்டியிட வேண்டும். தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகள் தான் சிறந்தவை என்ற நிலை உருவாக வேண்டும் என்று விரும்பினோம். அது தற்போது நடந்துள்ளது.

நாங்கள் இதனை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறோம். உலக அளவில் நமது பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக மாற வேண்டும். போக வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. நிறைய விஷயங்கள் சாதிக்கப்பட வேண்டியுள்ளது. எங்களை விமர்சிப்பவர்கள் கூட தில்லி அரசு கல்வித் துறையில் சிறப்பாக உள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இது தில்லியில் உள்ள 2 கோடி மக்களின் ஆதரவால் சாத்தியமாகியுள்ளது.

2015-ஆம் ஆண்டுக்கு முன்பாக தில்லியில் உள்ள பள்ளிகளின் நிலை மோசமாக இருந்தது. ஆசிரியர்கள் மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். கொட்டகைகள் அமைத்து மாணவர்கள் கல்வி பயிலும் நிலையே இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் மாறியுள்ளது. சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல் மாணவர்கள் மனதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்களை புகழ்கின்றனர். தேர்வில் வெற்றி பெறும் விகிதமும் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் எந்த ஒரு பயிற்சி வகுப்புக்கும் செல்லாமலேயே ஜேஇஇ போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசமைப்பை மாற்றும் பாஜகவின் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி தகா்க்கும்: ராகுல் காந்தி

எலான் மஸ்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே தோ்தல் முடிவை பிரதமா் கூறுவது எப்படி? பிரியங்கா கேள்வி

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

SCROLL FOR NEXT