தேர்தலில் அம்பேத்கரை தோற்கடித்தது காங்கிரஸ்: முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு
பட்டியலினத்தவரின் மேம்பாட்டுக்காக பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பணியாற்றி வருவதாகத் தெரிவித்த தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், 1950-களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்
சென்னூர்/மாந்தானி: பட்டியலினத்தவரின் மேம்பாட்டுக்காக பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) பணியாற்றி வருவதாகத் தெரிவித்த தெலங்கானா மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், 1950}களில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஆர்.அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்ததாகக் குற்றஞ்சாட்டினார்.
தெலங்கானா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நவ.30}ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பேசியதாவது:
தலைநகர் ஹைதராபாதில் 125 அடி அம்பேத்கர் சிலையை பிஆர்எஸ் அரசு அமைத்துள்ளது. பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக தலித் பந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் கடந்து வந்த பாதையை வாக்காளர்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். பட்டியலின மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பிற கட்சிகள் பயன்படுத்துகின்றன.
இந்த மக்களுக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு போராட்டங்களை அம்பேத்கர் மேற்கொண்டார்.
தொடக்க காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அவரை காங்கிரஸ் தோற்கடித்தது. அவருடையக் கொள்கைகளை அக்கட்சி அமல்படுத்தவில்லை.
மாநிலம் உருவாக்குப்படுவதற்கு முன்பாக 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காங்கிரஸ் குடிநீர் மற்றும் பாசன வசதி திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியை மட்டுமே கண்டது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என அக்கட்சி உறுதியளித்தபோதிலும், 14 முதல் 15 ஆண்டுகளுக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே துறை, நிலக்கரி சுரங்கங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தெலங்கானாவில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் கூட இந்த வசதி இல்லை என்றார் அவர்.