மக்களவை எதிரிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தைத்த காலணியை கோடி ரூபாய் கொடுத்தாலும், யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்று காலணி தைக்கும் தொழிலாளி ராம்சைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 26ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே காலணி தைக்கும் தொழிலாளி ராம்சைத்தின் கடைக்குச் சென்று அவரிடம் உரையாடிய ராகுல் காந்தி, காலணி தைக்கவும் கற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி தைத்த காலணியை வாங்குவதற்கு பலரும் ராம்சைத்தை அழைத்து வருகின்றனராம். சுமார் 2 லட்சம் ரூபாய் வரை கொடுப்பதாக அவரிடம் பேரமும் பேசப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ராம்சைத், “கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த காலணியை யாருக்கும் கொடுக்க மாட்டேன், நான் உயிருடன் இருக்கும் வரை அவற்றை ஃப்ரேம் செய்து, என் கண் முன்னே வைத்திருப்பேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளாக காலணி தைக்கும் தொழிலை நான் செய்து வரும் நிலையில், திடீரென்று கடவுளே என் கடைக்கு வந்தது போல் இருந்ததாக ராகுல் காந்தியை சந்தித்த தருணத்தை மகிழ்வுடன் விவரித்தார் ராம்சைத்.
மேலும், ராகுல் காந்தியை சந்தித்த தருணம் குறித்து ராம்சைத் கூறியதாவது:
“முதலில் ராகுல் காந்தியின் கார் கடை முன் நின்றபோது, நீதிமன்றத்துக்கு வரும் ஏதேனும் அரசியல்வாதியாக இருக்கக்கூடும் என்று நினைத்தேன். பின்னர் ராகுல் காந்தி என்பதை உணர்ந்தேன். அவர் ஒரு காலணியை எடுத்து எப்படி தைப்பது என்பதை கற்றுக் கொடுங்கள் எனக் கேட்டார். நான் அவருக்கு கற்றுக் கொடுத்தேன், பின்னர் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தேன். எனது சம்பளம் குறித்து கேட்ட அவரிடம், நாளொன்றுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை சம்பாதிப்பேன் எனத் தெரிவித்தேன். அவரிடம் தையல் இயந்திரம் வாங்கி உதவுமாறு கேட்டேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, அடுத்த நாளே எலக்ட்ரிக் தையல் இயந்திரத்தை தனது உதவியாளர்கள் மூலம் ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.
மேலும், “அந்த இயந்திரத்தை கொடுத்து அனுப்பிய உதவியாளர்களிடம் இரண்டு ஜோடி காலணிகளையும் எனக்காக ராகுல் காந்தி அனுப்பினார். நான் ஏற்கெனவே, ராகுல் காந்தியின் கால் அளவை கேட்டு வைத்திருந்தேன், அவர்களிடம் ராகுல் காந்திக்காக தயாரிக்கப்பட்ட காலணிகளை பரிசாக கொடுத்து அனுப்பினேன்” என்று ராம்சைத் அனுபவங்களை பகிர்ந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.