இந்து, கிறிஸ்தவ, புத்த மதத்தினர் பாதுகாக்கப்பட வேண்டும்: வங்கதேசத்திடம் பிரியங்கா காந்தி கோரிக்கை!
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரியங்கா காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் இந்தத் தாக்குதலுக்கு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் ``அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் பற்றிய செய்திகள் கவலை அளிக்கிறது.
எந்தவொரு நாகரிகமான சமுதாயத்திலும் மதம், சாதி, மொழி அல்லது அடையாளத்தின் அடிப்படையில் நிகழும் பாகுபாடு, வன்முறை மற்றும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
வங்கதேசத்தின் நிலைமை விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், அங்குள்ள் இந்து, கிறிஸ்தவ மற்றும் புத்த மதங்களைப் பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பையும் மரியாதையையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால அரசு உறுதி செய்யும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்தின் உயா்நீதிமன்றம் மீண்டும் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று தீா்ப்பு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், அவாமி கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும், கடந்த மாதம் மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்ததுடன், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்தார்.
இதனையடுத்து, வங்கதேசத்தில் நிலவிவரும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்தது; இருப்பினும், வங்கதேசத்தில் வன்முறை முடிவுற்றதாகத் தெரியவில்லை.
ஷேக் ஹசீனா, வங்கதேசத்தைவிட்டு வெளியேறி, இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பின்னர், வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் பல இந்து கோயில்கள், வீடுகள், வணிகக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதுடன், பெண்களும் தாக்கப்பட்டனர்.