மும்பை: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஒருவர் பலி!
காரில் வந்தவர்கள் போதையில் இருந்தனரா என்று விசாரணை
மும்பையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறிய விபத்தில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மும்பையில் வசித்து வந்த ரிக்ஷா ஓட்டுநரான கணேஷ் யாதவ், மற்றொருவரான பப்லு ஸ்ரீவஸ்தவா இருவரும், ஆக. 12, திங்கள்கிழமை, அதிகாலையில் வெர்சோவா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அந்த வழியே வந்த எஸ்யூவி ரகக் கார் ஒன்று, தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறி, விபத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தலையில் பலத்த காயமடைந்த பப்லு, கண்விழித்துப் பார்க்கையில், கணேஷின் மீது கார் ஏறி, இறங்கியிருப்பதைக் கண்டதையடுத்து, மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து, காரை ஓட்டி வந்த நிகில் ஜாவ்லே (34), அவரது நண்பர் சுபம் டாங்ரே இருவரும் கீழிறங்கி வந்தபோது, அங்கிருந்த பொதுமக்கள் கூட்டமாகக் கூடியதால், காரில் வந்த இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கணேஷையும் பப்லுவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கணேஷ் உயிரிழந்தார்.
இந்த நிலையில், சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், விபத்தினை ஏற்படுத்திய நிகில், சுபம் இருவர் மீதும் கொலைக்குச் சமமான வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், சம்பவத்தின்போது இருவரும் போதையில் இருந்தனரா? என்பதை அறிய, இருவரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.