முகப்பு
இந்தியா

ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால் கூடுதலாக 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்கலாம் -சஞ்சய் ராவத்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்கூட்டியே அறிவித்து போட்டியிட்டிருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும்...

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 11:19 AM
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பகிர்:

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் இப்போதே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள மகா விகாஸ் அகாதி கூட்டணி, மக்களவை தேர்தலை போலவே எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ”முதல்வர் வேட்பாளரை பார்த்துதான், மக்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றியமைத்துக் கொள்கின்றனர்.

மகாராஷ்டிரத்தில் மாநில அரசை ஆட்சியிலிருந்து மாற்றும் முயற்சியில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள 3 கட்சிகளும் கடுமையாக உழைத்து வருகின்றன. எங்கள் கூட்டணியிலிருந்து, முதல்வர் வேட்பாளராக யாரை தேர்ந்தெடுத்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.

மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், இந்தியா கூட்டணிக்கு கூடுதலாக 25 முதல் 30 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும்” என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி 234 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒருவேளை, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 264-ஆக அதிகரித்திருக்கக்கூடும்.

மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 263-ஆக(293 தொகுதிகளிலிருந்து) குறைந்திருக்கக்கூடும். இந்த சூழலில், மத்தியில் ஆட்சிப்பொறுப்பை இந்தியா கூட்டணி ஏற்கும் நிலைமை உருவாகியிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில் மகா விகாஸ் அகாதி கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் இங்கு 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை அவற்றில் 14 இடங்களில் தோல்வியடைந்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று(ஆக. 16) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மகா விகாஸ் அகாதி கூட்டணி, தேர்தலுக்கு முன்கூட்டியே தங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகளிடம் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்தகட்டமாக, தேதி மகா விகாஸ் அகாதி கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளையொட்டி வரும் 20-ஆம் தேதி மும்பையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் கலந்துகொள்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →