சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்
சிக்கிமில் கனமழை, நிலச்சரிவு! வெளியேற முடியாமல் பரிதவிக்கும் பயணிகளை குழுக்களாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாள்களாக பெய்த கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, சிக்கிமின் மங்கன் மாவட்டத்தில் கனமழை எதிரொலியால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கேங்க்டாக்கிலிருந்து மங்கன் நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 310இல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் பலர் தாங்கள் தங்கியுள்ள இடங்களிலிருந்து வெளியேற முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
குறிப்பாக மங்கன் மாவட்டத்தில் மட்டும் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை நிலவியதால் அவர்களை மீட்கும் பணிகள் தொய்வடைந்தன. ஹெலிகாப்டர்கள் மூலமாக பாதிக்கப்பட்ட இடங்களில் இருப்போரை மீட்கும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதால், இன்று(ஜூன் 17) சாலை மார்க்கமாக அவர்களில் பலர் கேங்க்டாக் வரவழைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சாலையில் வாகனங்கள் செல்ல ஏதுவாக போக்குவரத்தை சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் உதவியுடன் சுற்றுலா பயணிகள் குழுக்களாக மீட்கப்பட்டு, கேங்க்டாக் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.