தேர்வுகளுக்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம்: அகிலேஷ்
நெட், முதுநிலை நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைத்திருந்த நிலையில் அகிலேஷ் யாதவ் கருத்து.
தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்யலாம் என மக்கள் சொல்வதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
நெட், முதுநிலை நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைத்த நிலையில் அகிலேஷ் யாதவ் இந்த கருத்தைக் குறிப்பிட்டார்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறவிருந்த நிலையில், அத்தோ்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
நீட், நெட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சா்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ், தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக பாஜக அரசை ரத்து செய்வதே நல்லது என மக்கள் நினைப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிகார் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.