சுதந்திர போராட்டத்திலும், நாட்டின் ஒற்றுமையிலும் பாஜக மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்ஸுக்கு எந்தப் பங்கும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் 20-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் லத்தூரில் இன்று கார்கே பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பாஜக தலைமையிலான மஹாயுதி ஆட்சியைத் திருடர்களின் அரசாங்கம் என்றும், அதைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்த ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒற்றுமையை வளர்ப்பதையும், அனைத்து பிரிவினருக்கும் சமமான சலுகைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களைப் பிரிப்பதற்காக அல்ல என்றார்.
“நாட்டையும் அனைத்து சமூகங்களையும் ஒற்றுமையாக வைத்திருக்கக் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்".
நாட்டின் சுதந்திரம் மற்றும் ஒற்றுமைக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எந்த பங்களிப்பையும் கொண்டிருக்கவில்லை. மகாயுதி என்பது திருடர்களின் அரசாங்கம். துரோகிகளுக்குப் பாடம் புகட்ட இந்த தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பு.
மகாராஷ்டிரத்தில் விவசாயிகள் கொலை மற்றும் என்டிஏ அரசைக் குறிவைக்கும் வகையில் சொத்துக் குவிப்பு வரையிலான அனைத்து பிரச்னைகளையும் எழுப்பினார்.
மகாராஷ்டிரத்தில் தினமும் ஏழு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். சாமானியர்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் ரொக்கம் வைப்பதாகவும், தேர்தலுக்கு முன் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பணத்தை மீட்டப் பிறகு ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பினை உருவாக்குவதாகவும் மோடி பொய் வாக்குறுதிகளை அளித்தார்.
கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் ஆகியவற்றைக் காங்கிரஸ் அரசின் சாதனைகளாக அவர் பட்டியலிட்டார். காங்கிரஸ் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக உழைத்தபோது பாஜக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்தது என்றும் கார்கே மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.