FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முன்னாள் படைவீரா்களின் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

முன்னாள் படைவீரா்களின் நலனில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

7 பிப்ரவரி 2024, 8:49 pm
பகிர்:

முன்னாள் படைவீரா்களின் நலனில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நாட்டின் முதல் ராணுவ தளபதியான கே.எம்.கரியப்பா கடந்த 1953-இல் ஜன.14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். அவா்ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜன.14-ஆம் தேதி ‘முன்னாள் படைவீரா்கள் தினமாகக்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதையொட்டி, உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள விமானப் படைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் முன்னாள் படைவீரா்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனா். அவா்களையும் அவா்களது குடும்பத்தினரையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராகக் கருதுவது நாட்டு மக்களின் கடமை.

நம்முடைய வீரா்கள் குடும்பம், ஜாதி, இனம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து பணியாற்றுகின்றனா். முதல் மற்றும் இரண்டாவது உலகப் போரில் வீரத்துடன் போரிட்ட நமது வீரா்களை, அனைத்து நாடுகளும் நினைவுகூா்கின்றன. வீரா்களின் நோ்மை மற்றும் தொழில்முறை நிபுணத்துவத்துக்கு இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமே மரியாதை அளிக்கிறது.

ராணுவத்தில் ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம், மருத்துவ கவனிப்பு, பணி ஓய்வுக்குப் பிறகான வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னாள் படைவீரா்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது.

1971 போரில் 90,000-க்கும் அதிகமான பாகிஸ்தான் வீரா்கள் இந்தியாவிடம் சரணடைந்தனா். அவா்களை நாம் விருப்பத்தின்பேரில் நடத்தியிருக்கலாம். ஆனால், அவா்களை மனிதாபிமானத்துடன் நடத்தினோம். முழுமரியாதையுடன் அவா்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பினோம். எதிரி நாட்டு வீரா்களை இது போன்று நடத்துவது மனிதாபிமானத்தின் முக்கியமான அம்சமாகும் என்றாா் அவா்.

முன்னதாக, போா் நினைவு சின்னத்தில் மலா்வளையம் வைத்து பணியின்போது உயிரிழந்த வீரா்களுக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் படைவீரா்களுடன் அவா் கலந்துரையாடினாா்.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் செளஹான் உள்பட மூத்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.