தனியார் செயல் நுண்ணறிவு முதலீட்டில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக ஐ.நா. அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகளவில் தனியார் செயல் நுண்ணறிவு முதலீட்டில் பத்தாவது இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1.4 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்தியா பத்தாவது இடத்தைப் பெற்றதாக அறிக்கை கூறுகிறது.
ஐ.நா. வர்த்தகம் மற்றும் மேம்பாடு வெளியிட்ட 2025 தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அறிக்கை, செயல் நுண்ணறிவு துறையில் வளரும் நாடான இந்தியாவின் இருப்பைக் காட்டுகிறது. வளரும் நாடாக இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவு தனியார் நிதியை ஈர்த்துள்ளது. இந்தியாவுடன் சீனா, பிரேசில் போன்ற நாடுகளும், வருமான நிலைகளின் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை கூறுகிறது.
2022 ஆம் ஆண்டில் 48 வது இடத்தில் இருந்த இந்தியா, 2024-ல் 36 ஆவது இடத்தை அடைந்தது. இது குறிப்பிடத்தக்க மற்றும் பெரியளவிலான வளர்ச்சி என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள். அதுமட்டுமின்றி, 2033 ஆம் ஆண்டில் செயல் நுண்ணறிவு சந்தை, உலகளாவிய மதிப்பான 4.8 டிரில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, இந்தியா ஒரு முக்கிய பங்களிப்பாளராக மாறியதற்கு, அதிகளவிலான டெவலப்பர்களும் காரணம் என்று கூறுகின்றனர். அறிக்கையின்படி, சுமார் 13 மில்லியன் டெவலப்பர்களுடன் உலகின் மிகப்பெரிய டெவலப்பர் சமூகங்களில் ஒன்றாக இந்தியா உள்ளது.
பல ஆண்டுகளாக, செயல் நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் அரசு குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளது. உலகளவில் 100 நிறுவனங்கள் மட்டுமே (குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சீனா) செயல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களில் 40 சதவிகிதம் பங்களிக்கின்றன. இந்த இடைவெளியைக் குறைக்க அரசு, கல்வியாளர்கள், தனியார் துறைகளுக்கு இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பு தேவைப்படும்.
இதையும் படிக்க: தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.