கறைபடிந்த நபர்கள் பிரதமராகவோ, முதல்வராகவோ, அமைச்சராகவோ ஏன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்த பதவி நீக்க சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சிறையில் இருந்துகொண்டு முக்கிய பதவிகளை வகிப்பவர்கள், சிறையில் இருந்துகொண்டு செயல்பட ஏன் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஒருவர் அரசு ஊழியராக இருந்து, அவர் கைது செய்யப்பட்டு 50 மணி நேரம் சிறையில் வைக்கப்பட்டிருந்தால், தன்னிச்சையாகவே, அவர் வேலையை இழந்துவிடுவார், அது ஓட்டுநராக இருந்தாலும் சரி, கிளெர்க், பியூனாக இருந்தாலும் சரி. ஆனால், ஒருவர் முதல்வராக, அமைச்சராக, பிரதமராக இருந்தால், அவர் அந்தப் பதவியிலேயே இருப்பார், சிறையில் இருந்தாலும் கூட என்று, நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியிருந்த மூன்று சட்டத்திருத்த மசோதாக்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி.
சிறையிலிருந்து அரசை நடத்த ஏன் அனுமதிக்க வேண்டும்? கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? தங்களது தலைவர்கள் சிறந்த ஒருமைப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.
விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் பிகாருக்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, கயாஜி அருகே நடைபெற்ற மிகப்பெரிய கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும்போது, இதனைத் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, அரசு ஆவணங்கள் சிறையில் கையெழுத்தானது, அரசுக்கான உத்தரவுகள் சிறையிலிருந்து பிறப்பிக்கப்பட்டது என்பதையெல்லாம் பார்த்தோம். தலைவர்கள் இப்படி செயல்பட்டால், ஊழலுக்கு எதிராக எப்படி நாம் போராட முடியும் என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
என்னென்ன மசோதா?
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே ‘யூனியன் பிரதேசங்கள் திருத்த மசோதா 2025, அரசமைப்புச் சட்டம் 130-ஆவது திருத்த மசோதா 2025, ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்பு திருத்த மசோதா 2025’ என்ற அந்த 3 மசோதாக்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்கள் 31வது நாள் பதவியை இழக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் அவையில் அறிமுகம் செய்யப்பட்டவுடன், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அவையின் மையப் பகுதியில் கூடி முழக்கங்களை எழுப்பினர். சில உறுப்பினா்கள் அந்த மசோதா நகல்களைக் கிழித்து, அவையில் மசோதாவை அறிமுகம் செய்து உரையாற்றிக் கொண்டிருந்த அமித் ஷா முன்பாக தூக்கி எறிந்தனர்.
இதையும் படிக்க...5.5 கோடி விசாக்கள் மறுபரிசீலனை: அமெரிக்கா அறிவிப்பு! இந்தியர்கள் மட்டும் 50 லட்சம் பேர்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.