வங்க மொழி பேசும் மக்களை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்ப முடியாது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சதாப்தி ராய் மக்களவையில் கூறியுள்ளார்.
மக்களவையில், ஒடிசாவில் இருந்து வங்கதேசத்துக்கு நாடு கடத்தப்பட்ட நபரின் வழக்கைக் குறிப்பிட்டு பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சதாப்தி ராய், வங்க மொழி பேசும் மக்கள் நாடு கடத்தப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு மொழியைக் காரணமாகக் கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், சதாப்தி ராயின் உரை முடிவதற்கு முன்பு அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததால் அவரது மைக்கின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், அவருக்கு பிறகு பாஜக மக்களவை உறுப்பினர் ஜுகல் கிஷோர் பேசத் தொடங்கியவுடன், திரிணாமூல் மக்களவை உறுப்பினர்கள் சதாப்தி ராய் மற்றும் மஹுவா மொய்த்ரா ஆகியோர் ஜுகலின் இருக்கைக்குச் சென்று அவரின் மைக்கில் பேச முயன்றனர்.
இதையடுத்து, அவைத் தலைவர் மற்றும் பாஜக உறுப்பினர்களின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து இருவரும் அவர்களது இருக்கைகளுக்குத் திரும்பினர். பின்னர், சதாப்தி ராயின் உரையை முடிக்க அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், வங்க மொழி பேசும் மக்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்ப முடியும் என்றால், இந்தி மற்றும் உருது பேசும் பாஜகவினர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறினார். இதனால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் உருவானது.
இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மக்களவை உறுப்பினர் சம்பிட் பத்ரா கூறியதாவது:
“திரிணாமூல் உறுப்பினர் இந்தி மற்றும் உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறியது மிகவும் தவறான ஒன்று. அந்தக் கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும். ஆம்! வங்க மக்கள் எங்கள் சகோதரர்கள்தான் ஆனால் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியா மக்களுக்கு ஒடிசாவில் இடமில்லை.” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: இன்று நள்ளிரவு முதல் விமான சேவைகள் சீராகும்! - விமானப் போக்குவரத்து அமைச்சகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.