குளிர்காலக் கூட்டத்தொடருக்கு மத்தியில் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
இந்திய காங்கிரஸின் அயலக அணி நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகின்ற டிச. 15 ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணத்தை விமர்சித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஸாத் பூனாவாலா வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததைச் செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 19 வரை நடைபெறுகிறது. ஆனால், ராகுல் காந்தி டிசம்பர் 15 முதல் 20 வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் ஒரு எல்ஓபி (LoP) - சுற்றுலாத் தலைவர் (லீடர் ஆஃப் பரியாதன்).
பிகார் தேர்தலின் போதும் அவர் வெளிநாட்டிலும் பின்னர், வனச் சவாரியும் மேற்கொண்டார்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுலின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக காங்கிரஸ் அயலக அணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
“வருகின்ற டிச. 17 ஆம் தேதி பெர்லினில் புலம்பெயர்ந்த இந்தியர்களை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் அயலக அணித் தலைவர்களையும் சந்தித்து ராகுல் காந்தி உரையாற்ரவுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அயலக காங்கிரஸில் அதிகளவிலான உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.