குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு நாளை (டிச. 11) செல்லவுள்ளார். இதனையடுத்து, தலைநகர் இம்பாலில் அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இம்பாலுக்கு நாளை வருகை தரும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்குள்ள உலகின் மிகவும் பழமையான போலோ விளையாட்டுத் திடல்களில் ஒன்றான இம்பால் போலோ திடலில் நடைபெறும் போட்டிகளை பார்வையிடவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரும் டிச.12 ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய மணிப்பூரின் பெண் போராளிகளின் நினைவாக இம்பாலில் அமைக்கப்பட்டுள்ள நூபி லால் நினைவு வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்துகொண்டு மரியாதைச் செலுத்துவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், குடியரசுத் தலைவரின் வருகையால் இம்பாலின் பிர் திகேந்திரஜித் பன்னாட்டு விமான நிலையம் முதல் நூபி லால் நினைவு வளாகம் வரையில் உள்ள 7 கி.மீ. நீள சாலை முழுவதும் சீரமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இருவேறு குழுக்களுக்கு இடையில் நடைபெற்று வந்த மோதல்களால் சுமார் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காங்கிரஸ் கேள்விகளுக்கு அமித் ஷாவிடம் பதில் இல்லை: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.