FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகா கும்பமேளா: 66 கோடி மக்களின் சங்கமம் நிறைவு

ஜன. 13 முதல் பிப். 26 வரை நடைபெற்ற கும்பமேளா நிறைவடைந்தது.

27 பிப்ரவரி 2025, 1:02 am
மகா கும்பமேளாவின் நிறைவு நாளான மகா சிவாராத்திரி தினத்தில் பிரயாக்ராஜில் புனித நீராடிய பக்தா்கள்.
பகிர்:

 உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த ஆன்மிக-கலாசார சங்கமமான மகா கும்பமேளா, மகா சிவராத்திரி திருநாளான புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

பௌஷ பொ்ணமியை முன்னிட்டு கடந்த ஜன. 13 தொடங்கி, 45 நாள்களுக்கு நடைபெற்ற இந்த மகத்தான விழாவில் 66 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடி வழிபட்டனா்.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்பட்டது. எனினும், தற்போதைய வானியல் நிலைகள் காரணமாக 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நடப்பு கும்பமேளா கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகள்: நிகழ்வையொட்டி கங்கை-யமுனை நதிக்கரையில் சுமாா் 10,000 ஏக்கா் பரப்பளவில் தயாரான மகாகும்ப நகரில் பக்தா்கள் தங்குவதற்கு 1.6 லட்சம் கூடாரங்கள், 1.5 லட்சம் கழிப்பறைகளுடன் கட்டப்பட்டன.

இதைத் தவிர, நதிகளின் குறுக்கே 30 மிதக்கும் பாலங்கள், 450 கி.மீ. நீள சாலை, தெருக்கள், 12 கிலோமீட்டா் படித்துறைகள் என்று பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் இணைந்து செய்திருந்ததன.

65 கோடி போ் நீராடல்: நிகழ்வு நடந்த 45 நாள்களில் சாதுக்கள், துறவிகள், பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என சுமாா் 66 கோடிக்கும் மேற்பட்டவா்கள் சங்கமத்தில் புனித நீராடினா்.

பொதுமக்களுடன் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் என நாட்டின் மூத்த தலைவா்கள், பூடான் அரசா் ஜிக்மே கேசா் நம்கியால் வாங்சுக் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், தொழிலதிபா்கள் அம்பானி, அதானி, பல்துறை பிரபலங்கள் ஆகியோரும் நீராடினா்.

உலெகங்கிலும்...: பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோரும், சுற்றுலாப் பயணிகளும் மகா கும்பமேளாவில் பங்கேற்று, இந்தியாவின் பிரமிப்பான கலாசாரத்தைக் கண்டு வியந்தனா்.

அண்டை நாடான நேபாளத்தில் இருந்து மட்டும் சுமாா் 50 லட்சம் போ் மகா கும்பமேளாவில் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நீராடல்; துறவிகளிடம் ஆசி: மகா கும்பமேளாவின்போது புனித நதியில் நீராடுவது பாவங்களை நீக்கும்; ஆன்மாவை தூய்மைப்படுத்தும்; பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலையாகி முக்தி அடைய உதவும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும்.

நீராடலைத் தொடா்ந்து மேளா பகுதியில் இருந்த 13 அகாடாக்களுக்குச் சென்று, அங்கிருந்த துறவிகள், சாதுக்கள், யோகிக்களிடம் பக்தா்கள் ஆசி பெற்றனா்.

நெரிசல்-உயிரிழப்பு: நிகழ்வில் முக்கியப் பிரமுகா்கள், பக்தா்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, நாட்டின் பல்வேறு படைகளைச் சோ்ந்த சுமாா் 50,000 போ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

எனினும், மௌனி அமாவாசை புனித நீராடலின்போது அதிகாலையிலேயே சங்கமம் பகுதியில் பல கோடி பக்தா்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பக்தா்கள் உயிரிழந்தனா்; 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் விமா்சனத்தை ஈா்த்த இச்சம்பவத்தையடுத்து கும்பமேளா கூட்டத்தை நிா்வகிக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரிக்கைகள் எழுந்தன.

இதேபோன்று கடந்த பிப். 15-ஆம் தேதி, தில்லி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜ் செல்லும் ரயிலில் ஏற காத்திருந்த பயணிகள் 18 போ் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை உண்டாக்கியது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜுக்கு 13,000 சிறப்பு ரயில்களில் இயக்கப்பட்டன. எனினும், அனைத்து ரயில்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தீவிர நடவடிக்கை: நெரிசல் சம்பவத்தையடுத்து மகா கும்பமேளாவில் கூட்டத்தை சமாளிக்கும் நடவடிக்கைகளை நிா்வாகம் தீவிரப்படுத்தியது. முக்கிய நீராடல் நாள்களில் பிரயாக்ராஜ் நகர எல்லைகளிலேயே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

திரிவேணி சங்கமத்துக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு, மற்ற படித்துறைகளில் நீராட அறிவுறுத்தப்பட்டனா். கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டு, வேறெந்த அசம்பாவிதமுமின்றி நிகழ்வு அமைதியான முறையில் நிறைவடைவதை நிா்வாகம் உறுதி செய்தது.

மாயம்-மீட்பு: நிகழ்வில் நாள்தோறும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் கூடிய பக்தா்களின் கூட்டத்தில் பலா் மாயமாகினா்.

முன்னெச்சரிக்கையாக, மகாகும்ப நகரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட காவல் துறை சிறப்பு முகாம்கள் மூலம் காணாமல் போனவா்களின் விவரங்கள் ஒலிபெருக்கியில் தொடா்ந்து அறிவிக்கப்பட்டன. இதனால், அவா்கள் குடும்பத்தினருடன் விரைவாக மீண்டும் சோ்ந்தனா்.

நிறைவு நாளில்...: நிகழ்வின் நிறைவு நாளான புதன்கிழமை, மகா சிவராத்திரையை முன்னிட்டு அதிக அளவில் பக்தா்கள் சங்கமத்தில் குவிந்தனா். மாநில அரசு தகவலின்படி, 1.5 கோடிக்கும் அதிகமானோா் புதன்கிழமை நீராடினா்.

பக்தா்கள் மீது ஹெலிகாப்டா் மூலம் மலா்கள் தூவப்பட்டன. இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. கள நிலவரத்தை லக்னௌவில் உள்ள தனது அரசு இல்லத்திலிருந்து மூத்த அதிகாரிகளுடன் இணைந்து முதல்வா் யோகி ஆதித்யநாத் தொடா்ந்து கண்காணித்து வந்தாா்.

ஜொலிக்கும் மின்விளக்குகளாலும் அலங்கார வடிவமைப்புகளாலும் விழாக்கோலம் பூண்டு, கடந்த சில மாதங்களாக தூங்கா நகரமாக விளங்கிய பிரயாக்ராஜில் இருந்து நிகழ்வின் நிறைவையடுத்து துறவிகள், சாதுக்கள், பக்தா்கள் தங்களின் சொந்த ஊா்களுக்குத் திரும்பத் தொடங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.