தெலங்கானாவில் அரசுப்பேருந்தும் லாரியும் மோதியதில் 24 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், தண்டூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் அரசுப் பேருந்து திங்கள்கிழமை புறப்பட்டது.
ரங்காரெட்டி மாவட்டம் மிரியால குடா அருகே ஹைதராபாத் - பிஜாபூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்துகொண்டிருந்தபோது டிப்பர் லாரியுடன் மோதி விபத்து ஏற்பட்டது.
மோதிய வேகத்தில் லாரி கவிழ்ந்ததில் அதில் இருந்த ஜல்லி கற்கள் பேருந்தின் மீது சரிந்தது. இதில் பல பயணிகள் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் 24 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். விபத்தில் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்று தேவையான அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மீட்புப் பணிகள் குறித்து தனக்குத் தொடர்ந்து தகவல் தெரிவிக்குமாறும் முதுல்வர் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.