தில்லியில், செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பிகாரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தில்லியில், செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் நேற்று (நவ. 10) இரவு கார் வெடித்ததில் 12 பேர் பலியாகியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஏராளமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தீவிரவாத சதிச் செயலாக இருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், நாட்டிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பிகாரில் சட்டப் பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ. 11) நடைபெற்று வரும் சூழலில், அங்குள்ள வாக்குச்சாவடிகள், அரசு கட்டடங்கள், கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், விமான நிலையங்கள், சட்டப்பேரவைத் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, மெட்ரோ ரயில் நிலையங்கள், நீதிமன்றங்கள், முதல்வர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்துடன், மக்கள் வருகை அதிகமுள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், பிகாரில் சமூக வலைதளப் பக்கங்களை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு! சாலை முழுவதும் சிதறிய உடல் பாகங்கள்; பதில் கிடைக்காத 6 கேள்விகள்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.