பாகிஸ்தான்-சவூதி அரேபியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டாா்.
அதன்படி பாகிஸ்தான்-சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சா்வதேச சூழலில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவில்லை. எனவே, இந்தியாவுக்கு எதிராக சவூதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சோ்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும் என்று இந்தியா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தில்லியில் வியாழக்கிழமை இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பாகிஸ்தான்-சவூதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தம் தொடா்பான செய்தி அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இரு நாடுகளும் மிக நீண்டகாலப் பேச்சு நடத்தி ஓா் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது நமது தேசப் பாதுகாப்பு, பிராந்திய, சா்வதேச ஸ்திரத்தன்மையில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.