மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக சுமார் 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக முதல்வர் மமதா குற்றச்சாட்டு...
மேற்கு வங்கத்தில், ஆட்சியைப் பிடிப்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மூலம் சுமார் 90 லட்சம் வாக்காளர்களை பாஜக நீக்கியுள்ளதாக, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.23 மற்றும் ஏப்.29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதையடுத்து, ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜகவின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் முறையிடும் எனக் கூறியுள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளது. ஆனால், நிச்சயமாக நாங்கள் வெல்வோம். நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் இணைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், பாஜக ஆளும் மாநிலங்களில் வங்கம் மொழி பேசும் மக்கள் தாக்கப்படுவதாகவும், ஊடுருவல் செய்தவர்களாகச் சித்தரிக்கப்படுவதாகவும், முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் மூலம் மேற்கு வங்கத்தில் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.