நாட்டின் பாரம்பரியத்தில் தமிழ் கலாசாரம் பரவியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய மோடி, “வணக்கம், இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தமிழில் வாழ்த்து தெரிவித்து உரையைத் தொடங்கினார்.
மேலும், அவர் பேசியதாவது”
”சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் தமிழர்களின் விழாதான் பொங்கல். பொங்கல் திருவிழாவானது இயற்கை, குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்குவதற்கான வழியைக் காட்டுகிறது. பொங்கல் பண்டிகையானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் லோஹ்ரி, மகர சங்கராந்தி, மாக் பிஹு வெவ்வேறு பெயர்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது இனிய பொங்கல் மற்றும் அனைத்துப் பண்டிகையைக் கொண்டாடுபவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்தாண்டு தமிழ் கலாச்சாரம் தொடர்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அது எனக்கு மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் நான் வழிபாடு செய்தேன். பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவுக்காக ராமேசுவரம் சென்றபோது, தமிழ் வரலாற்றின் பெருமையை மீண்டும் ஒருமுறை கண்டேன். நாட்டின் பாரம்பரியத்தில் தமிழ் கலாசாரம் பரவியுள்ளது. அதுமட்டுமல்ல, மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியமாகவும் விளங்குகிறது. நான் பேசும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வு, பொங்கல் போன்ற பண்டிகைகளால் மேலும் வலுப்பெறுகிறது.
உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து நாகரிகங்களும் பயிர்கள் தொடர்பான ஏதேனும் ஒரு பண்டிகையைக் கொண்டாடுகின்றன. தமிழ் கலாச்சாரத்தில், விவசாயி வாழ்க்கையின் அடித்தளமாகக் கருதப்படுகிறார். நமது விவசாயிகள் நாட்டைக் கட்டமைப்பதில் வலிமையான பங்களிப்பாளர்களாக உள்ளனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் நான் கலந்துகொண்டேன். அங்கு நமது தமிழக இளைஞர்கள் செய்துவரும் சிறந்த பணிகளைக் கண்டேன். அவர்கள் அதிக வருமானம் தரும் தொழில்முறைப் பணிகளை விட்டுவிட்டு, வயல்களில் பணியாற்றுகிறார்கள். நான் அவர்களைச் சந்தித்தேன். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள எனது இளம் தமிழ் நண்பர்கள், இந்த இயக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பிரபலங்கள், நீதிபதிகளும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.