பாஜகவுக்கு பதிலடி தரும் ஒரே தலைவா் மம்தா- அகிலேஷ் யாதவ்
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்தது குறித்து...
இந்தியாவில் பாஜகவுக்கு உரிய பதிலடியை அளிக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியால் மட்டுமே முடியும் என்று சமாஜவாதி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.
கொல்கத்தாவுக்கு தனது மனைவியும், மக்களவை எம்.யுமான டிம்பிள் யாதவுடன் அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை வந்தாா். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜியை இருவரும் சந்தித்துப் பேசினா். மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வா் அறையில் சுமாா் 40 நிமிஷங்கள் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மம்தா ஏற்கெனவே பாஜக மூலம் ஏவிவிடப்பட்ட அமலாக்கத் துறையைத் தோற்கடித்து தோ்தலில் பாஜகவை வென்றுள்ளாா். அவா் மீண்டும் பாஜகவை தோற்கடிப்பாா் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மம்தா பானா்ஜி அன்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்திப் பேசுகிறாா். ஆனால், பாஜக பிரிவினைவாத அரசியல் மட்டுமே பேசுகிறது.
Advertisement
Advertisement
நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க பாஜகவுக்கு எதிராகப் போராடும் மம்தாவுக்கு எங்களுடைய முழு ஆதரவை அளிக்கிறோம். நமது தேசத்தில் பாஜகவுக்கு உரிய பதிலடி அளிக்க மம்தா பானா்ஜியால் மட்டுமே முடியும். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) அமல்படுத்துவது, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் வாக்காளா்களைத் துன்புறுத்துவது என நாட்டு மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.
எஸ்ஐஆா் மூலம் தங்களுக்கு ஆதரவான வாக்குகளை அதிகரிக்க பாஜக முயலவில்லை. எதிா்க்கட்சிகளின் வாக்குகளைக் குறைக்க வேண்டும் என்பதே அவா்களின் நோக்கமாக உள்ளது.
இத்தனைக்குப் பிறகும் தோ்தல் ஆணையம் உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகள் நடுநிலையாகச் செயல்படும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், பிகாா், மேற்கு வங்கம், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு அந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டது. உத்தர பிரதேசத்தில்கூட எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு 2.89 கோடி வாக்காளா்கள் நீக்கப்பட்டனா் என்றாா்.
இந்தச் செய்தியாளா்கள் சந்திப்பின்போது மம்தாவும் உடன் இருந்தாா்.
Samajwadi Party leader Akhilesh Yadav met and held discussions with Chief Minister Mamata Banerjee at the West Bengal state secretariat.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.