அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!
இந்திய விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளது குறித்து...
இந்திய விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த திங்களன்று (பிப். 2) ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 ஆகக் குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க விவசாயப் பொருள்கள் இந்திய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும், இதனால், அமெரிக்க விவசாயத் துறை அதிக லாபம் பெறும் எனவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய விவசாய சந்தையை அமெரிக்காவுக்கு வழங்கி மத்திய அரசு இந்திய விவசாயிகளுக்குத் துரோகம் செய்துள்ளதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி, அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது:
“பாஜக விவசாயிகளை மீண்டும் தாக்கியுள்ளது. என்ன அழுத்தம் என்பதை பாஜக அரசு தெரிவிக்க வேண்டும். இந்திய சந்தையை அமெரிக்க விவசாயப் பொருள்களுக்கு வழங்கியிருப்பது, விவசாயத்தைச் சார்ந்துள்ள நாட்டின் 70 சதவீத மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்.
சுயசார்பு குறித்து பேசும் பாஜக தலைவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் நாட்டின் பொருளாதாரத்தை ஏமாற்றியதற்காக எவ்வளவு கமிஷன் வாங்கியுள்ளனர் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இந்த ஒப்பந்தம் விவசாயிகள் மட்டுமின்றி நடுநிலை மக்களுக்கும் மிகப் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், பாஜக உணவு மற்றும் விவசாய நிறுவனங்களிடம் இருந்து பணம் வசூலிக்கும். இதனால், விலைவாசி மேலும் உயரும்” எனக் கூறியுள்ளார்.
Samajwadi Party leader Akhilesh Yadav has accused the central government of betraying Indian farmers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.