பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ உள்பட 7 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை பற்றி..
பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணித் தலைவரும், மோகா தொகுதி எம்.எல்.ஏ.வுமான அமன்தீப் கௌர் அரோரா உள்பட அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை புதன்கிழமை சோதனை நடத்தியது.
இந்தச் சோதனை நடவடிக்கை இன்று அதிகாலை தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் அரசு, நிறுவனச் சொத்துகளை மோசடியாகக் கையகப்படுத்தியது மற்றும் பொது நிதியை முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், மொத்தம் ஏழு இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை, அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் 754ஏ-க்காக கையகப்படுத்தப்பட்ட அரசு நிலத்தை மோசடியாகப் பெயர் மாற்றம் செய்தது, இழப்பீட்டுத் தொகையைத் தவறான நபர்களுக்கு வழங்கியது தொடர்பாக, பஞ்சாப் காவல்துறை கடந்த ஜூன் 16, 2024 அன்று பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை இந்த வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
அமன்தீப் கௌர் அரோரா, அவரது கணவர் ராகேஷ் அரோரா, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்கள் மட்டுமின்றி, ராகேஷ் அரோராவுடன் தொடர்புடைய போதை மீட்பு மையத்திலும் அமலாக்கத்துறை குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் இந்த வழக்கிற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
காவல்துறை பதிவு செய்த எப்ஃஐஆர் மற்றும் அமலாக்கத்துறையின் இசிஐஆர் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள், இந்த வழக்கில் எவ்வாறு பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளனர், என்னென்ன ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.