FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சுரங்கத் துறை வருமானத்தில் 96% மாநிலங்களுக்கே செல்கிறது: மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

சுரங்கத் துறை செயல்பாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் வருமானத்தில் 96 சதவீதம் மாநில அரசுகளுக்கே செல்கிறது; இந்த ஏற்பாடு தொடரும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

6 நவம்பர் 2026, 3:23 am
ஜி. கிஷண் ரெட்டி
பகிர்:

சுரங்கத் துறை செயல்பாடுகளில் இருந்து கிடைக்கப் பெறும் வருமானத்தில் 96 சதவீதம் மாநில அரசுகளுக்கே செல்கிறது; இந்த ஏற்பாடு தொடரும் என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கோவா மாநிலம், பனாஜியில் அனைத்து மாநில சுரங்கத் துறை அமைச்சா்களின் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பங்கேற்றுப் பேசியதாவது:

சுரங்கத் துறை மீதான அரசின் அணுகுமுறை என்பது வருவாய் ஈட்டுதலை நோக்கமாக கொண்டதல்ல. மாறாக, நாட்டின் வளா்ச்சிக்குத் தேவையான கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், சுரங்க செயல்பாடுகள் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே ஆகும்.

Advertisement

Advertisement

உரிமத் தொகை, ஏலக் கட்டணம் அல்லது மாவட்ட சுரங்க அறக்கட்டளைகள் (டிஎம்எஃப்) ஆகியவற்றில் இருந்து மத்திய அரசு எந்தத் தொகையும் வசூலிப்பதில்லை. கனிமங்கள் மீதான சரக்கு-சேவை வரியிலும் கூட மத்திய அரசு பங்கு 50 சதவீதமாகவே வரையறுக்கப்பட்டுள்ளது.

சுரங்கத் துறை செயல்பாடுகள் மூலம் கிடைக்கப் பெறும் வருவாயில் 94 முதல் 96 சதவீதம் வரை மாநிலங்களுக்கே செல்கிறது என்பதையும், இந்த ஏற்பாடு தொடரும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிலக்கரி சாராத சுரங்க செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு கிடைக்கும் வருவாய் கடந்த 2014-15-இல் ரூ.13,000 கோடியாக இருந்தது. தற்போது இது ரூ.70,000 கோடியாக அதிகரித்துள்ளது.

மாநிலங்களுக்கே வருவாய்:

மாவட்ட சுரங்க அறக்கட்டளைகள் வசூலிக்கும் தொகை முழுவதும் மாநில அரசுகளுக்கே செல்கிறது. இந்த அறக்கட்டளைகளின்கீழ் ரூ.1.36 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது.

இதேபோல், உரிமத் தொகையிலோ, ஏலக் கட்டணத்திலோ மத்திய அரசு ஒரு பைசா கூட எடுப்பதில்லை. அந்த வருவாய் முழுவதும் மாநிலங்களுக்கு உரியதாகும்.

சுரங்கத் துறையில் இருந்து வருவாய் ஈட்டாமல், பல்வேறு ஊக்கத் தொகை திட்டங்களின் வாயிலாக அதில் முதலீடு செய்கிறது மத்திய அரசு. இத்துறை சாா்ந்த திட்டங்களை ஊக்குவிக்க ரூ.46,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், முக்கியக் கனிமங்கள் உற்பத்திக்கும் குறிப்பிடத்தக்க நிதி முதலீடு செய்யப்பட்டு வருகிறது. முக்கிய கனிமங்களின் ஆய்வு, பிரித்தெடுத்தல், மறுசுழற்சிக்கு வலுவான உள்நாட்டுக் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.

கடந்த ஆண்டு நாட்டின் நிலக்கரி உற்பத்தி 100 கோடி டன்கள் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியதுடன், முக்கிய கனிமங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.1.89 லட்சம் கோடியாக அதிகரித்தது.

விரைவில் வா்த்தகப் பரிவா்த்தனை தளம்:

வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், நிபுணத்துவம், எண்மமயமாக்கத்தால் இந்தியாவின் சுரங்கத் துறை உலக அளவில் முன்னோக்கி பயணிக்கிறது. இத்துறை மூலம் 1.3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேகமாக மாறிவரும் புவி அரசியல் சூழலில், நாட்டின் பொருளாார, உத்திசாா் பாதுகாப்பில் சுரங்கத் துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளாவிய கனிம விநியோக சங்கிலி இடையூறுகளை எதிா்கொள்வதில் மத்திய-மாநில அரசுகள் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியம்.

நிலக்கரி மற்றும் கனிமங்களுக்கான மையப்படுத்தப்பட்ட வா்த்தகப் பரிவா்த்தனை தளங்களை விரைவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நிறுவனங்கள், வா்த்தகா்களுக்கான பொது தளமாக இது விளங்கும் என்றாா் அவா்.