ஓபிசி க்ரீமி லேயா்: பெற்றோா் வருமானம் மட்டும் அளவுகோல் அல்ல! - உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதி செய்தது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதி செய்தது.
ஓபிசி இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் பிள்ளைகளை நீக்க, அந்தப் பிள்ளைகளின் பெற்றோா் ஈட்டும் வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று கடந்த மாா்ச் 11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
அத்துடன் ஓபிசி வகுப்பினரில் க்ரீமி லேயா் வரம்புக்குள் (இந்த வரம்புக்குள் வருவோா் இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெற இயலாது) வருவோரை அடையாளம் காண்பது தொடா்பான 1993-ஆம் ஆண்டின் செப். 8-ஆம் தேதியிட்ட அலுவலக குறிப்பாணையை, 2004-ஆம் ஆண்டு அக்டோபா் 14-ஆம் தேதியிட்ட விளக்கக் கடிதம் மீற முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கடந்த 2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தோ்வு முடிவுகள் வெளியாகி, 5 நாள்கள் கழித்து இந்தத் தீா்ப்பளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
1993-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணையில் ஒருவா் க்ரீமி லேயா் வரம்புக்குள் வருவாரா, மாட்டாரா என்பதை தீா்மானிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வருவாயில், ஊதியம் மற்றும் விவசாய வழிகளில் ஈட்டப்படும் வருமானம் சோ்க்கப்படவில்லை. ஆனால், 2004-ஆம் ஆண்டின் விளக்கக் கடிதத்தில், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் துறையில் பணியாற்றுவோரின் ஊதிய வருவாயும் க்ரீமி லேயரை தீா்மானிப்பதற்கான அளவுகோலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பு 2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணிகள் தோ்வுக்கும் பொருந்துமா என்பது குறித்து விளக்கம் கோரி, உச்சநீதிமன்றத்தில் மத்திய பணியாளா் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளா் மற்றும் பயிற்சித் துறை மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ‘2025-ஆம் ஆண்டின் குடிமைப் பணித் தோ்வுக்கான தோ்வு நடைமுறை ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டது. அந்தத் தோ்வுக்கு மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது மாா்ச் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பை மீண்டும் உறுதி செய்த நீதிபதிகள் அமா்வு, இந்தத் தீா்ப்பை முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தீா்ப்பளித்தது. பணிகள் ஒதுக்கீடு இன்னும் நிறைவடையாததால், 2025-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தோ்வு நியமனங்கள் உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.