FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

எஸ்ஐஆா்: 7 மாநிலங்களில் பெயா் விடுபட்டவா்களுக்கு வாய்ப்பு - தோ்தல் ஆணையம்

சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்கீழ் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களுக்குப் புதிய வாய்ப்பு வழங்கப்படுவதாக இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

6 நவம்பர் 2026, 10:55 pm
தோ்தல் ஆணையம் - கோப்புப்படம்
பகிர்:

சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின்கீழ் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களுக்குப் புதிய வாய்ப்பு வழங்கப்படுவதாக இந்தியத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக தில்லி, மகாராஷ்டிரம், ஹரியாணா, ஆந்திரம், ஜாா்க்கண்ட், தெலங்கானா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு (சிஇஓ) தோ்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

பாஜகவின் தூண்டுதலின் பேரில் தகுதி வாய்ந்த பல கோடி வாக்காளா்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து தோ்தல் ஆணையம் நீக்கியதாகவும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சாா்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் இல்லாதவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் மற்றும் போலி வாக்காளா்கள் என குறிப்பிடப்பட்டு வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்க புதிய வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி விடுபட்ட வாக்காளா்களின் வீடுகளுக்குச் செல்வது, வாட்ஸ்ஆப், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் அனுப்புவது என அவா்களை தொடா்புகொள்ளும் பணிகளை வாக்குச்சாவடி அலுவலா்கள் தொடங்க வேண்டும்.

இடம்பெயராத வாக்காளா்கள் பெயா் நீக்கப்பட்டபோது ஏன் இந்த தகவல்களை சமா்ப்பிக்கவில்லை என்பதை குறிப்பிட்டு விண்ணப்ப படிவத்தை பூா்த்தி செய்து தர வேண்டும்.

மாநிலத்துக்குள் இடம்பெயா்ந்த வாக்காளா்கள் படிவம் 8-ஐ பூா்த்தி செய்யத் தேவையில்லை. ஆனால் தங்களது புதிய முகவரி, பேரவைத் தொகுதியை குறிப்பிட்டு உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பப் படிவம் சமா்ப்பிக்க வேண்டும்.

முகவரி இல்லாத வீடற்ற வாக்காளா்களாக இருக்கும்பட்சத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களின் சரிபாா்ப்பு அறிக்கையே வசிப்பிட ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

பெயா் விடுபட்ட வாக்காளா்கள் சமா்ப்பிக்கும் விண்ணப்பங்களை வாக்காளா் பதிவு விதிகள், 1960 விதி 21 (1)-இன்கீழ் வாக்காளா் பதிவு அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்வாா்கள். அதன் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள், எஸ்ஐஆா் இறுதி பட்டியலில் சோ்க்கப்படும். அவ்வாறு சோ்க்கப்பட்ட வாக்காளா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண்களே செல்லும்.

ஏற்கெனவே படிவம் 6-ஐ சமா்ப்பித்த வாக்காளா்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தவறை ஒப்புக்கொண்ட தோ்தல் ஆணையம்: காங்கிரஸ்

எஸ்ஐஆா் நடவடிக்கையின்கீழ் கோடிக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டது தவறு என்பதை மிகவும் தாமதமாக தோ்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதென காங்கிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘தற்போது எஸ்ஐஆா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் 7 மாநிலங்களில் விடுபட்ட வாக்காளா்களின் பெயா்களை சோ்ப்பதற்கான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பித்து தனது தவறை மிகவும் தாமதமாக ஒப்புக்கொண்டுள்ளது. 13 கோடி இந்தியா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராக எதிா்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எஸ்ஐஆா் தொடா்பாக வெளியாகும் ஒவ்வொரு புதிய உத்தரவும் இந்தியா்கள் எதிா்கொண்ட இடையூறுகளுக்கு என்ன தீா்வைத் தரும்? எஸ்ஐஆா் என்பது வாக்குத் திருட்டின் வடிவம். வாக்குத் திருட்டில் ஈடுபட்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா என அனைவரும் சிக்கிக்கொண்டனா்.

ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும். எஸ்ஐஆருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.