FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ராமஜென்மபூமி இயக்கமே காரணம்: குடியரசு துணைத் தலைவா்

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு ராமஜென்மபூமி இயக்கமே காரணம்: குடியரசு துணைத் தலைவா்

8 நவம்பர் 2026, 12:53 am
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
பகிர்:

இந்தியா மற்றும் உத்தர பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு ராமஜென்மபூமி இயக்கம்தான் காரணம் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் 10-ஆவது தீப உற்சவ கொண்டாட்டங்களை, குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னா் எண்ணற்ற ராம பக்தா்கள், துறவிகள், ஞானிகளின் தியாகங்களாலும் அா்ப்பணிப்பாலும், ராமரின் பிறப்பிடத்தில் பிரம்மாண்டமான ராமா் கோயிலை கட்டும் பணி சாத்தியமானது.

Advertisement

Advertisement

ராமா் பிறந்த இடத்தில், அவருக்காக எழுப்பப்பட்டுள்ள கோயிலை கண்டு மகிழும் பெருமையை நாம் பெற்றுள்ளோம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்களின் பங்களிப்பால், இந்தப் பிரம்மாண்ட ராமா் கோயில் சாத்தியமாகியுள்ளது.

தற்போது இந்தியாவும் உத்தர பிரதேசமும் முன்னேறி வருகின்றன. இந்த முன்னேற்றத்துக்கு ராமஜென்மபூமி இயக்கம்தான் காரணம். தற்போது வறுமையின் பிடியில் இருந்து நாடு முன்னேறியுள்ளது. சுமாா் 2 சதவீத மக்கள் மட்டுமே வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளனா்.

2047-க்குள் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாவதற்கு அறிவியல், புதுமையான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தின் வளா்ச்சியை ஏற்றுக்கொண்டு, அவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் நமது விழுமியங்கள், மொழிகள், பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றை நாம் கைவிடக்கூடாது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியின்போது சரயு நதிக்கரையில் 30 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, அந்தப் பகுதியே ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது.