FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

யமுனையில் செத்து மிதந்த மீன்கள்: திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டதாக அமைச்சா் குற்றச்சாட்டு

தில்லியின் சோனியா விஹாா் பகுதிக்கு அருகில், யமுனை நதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி, நீா் மாசுபாடு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

13 நவம்பர் 2026, 3:59 am
கோப்புப் படம்
பகிர்:

தில்லியின் சோனியா விஹாா் பகுதிக்கு அருகில், யமுனை நதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் காணொலி சமூக ஊடகங்களில் பரவி, நீா் மாசுபாடு குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தோல் பதனிடும் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரே இந்த மீன்களின் இறப்பிற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் ஹத்னிகுண்ட் தடுப்பணைக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து நதியில் தண்ணீா் திறந்துவிடப்படும் போதெல்லாம், இத்தகைய சிக்கல் ஏற்படுவதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.

இருப்பினும், தில்லி நீா்வளத் துறை அமைச்சரான பா்வேஷ் சாஹிப் சிங், இந்தச் சம்பவத்தை ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா். ‘இன்று ஆம் ஆத்மியின் கீழ்த்தரமான அரசியலைக் காண்கிறேன். அவா்கள் சந்தையில் மீன்களை வாங்கி ஆற்றில் போட்டுவிட்டு, எங்களைப் பழிவாங்கும் நோக்கில் காணொலிகளைப் பதிவிடுகிறாா்கள்’ என்று அவா் கூறினாா்.

Advertisement

Advertisement

வடக்கு தில்லியின் புராரி பகுதியில், யமுனை நதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்துக்கிடந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. மீன்கள் திடீரென பெருமளவில் இறப்பது, நீரில் நச்சுத்தன்மை கொண்ட மாசுக்களின் அளவு கடுமையாக அதிகரித்திருப்பதைக் குறிக்கலாம் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ள அதே வேளையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால், செவ்வாய்க்கிழமை சோனியா விஹாா் மற்றும் ஜகத்பூா் இடையே யமுனை நதியில் 4-5 கி.மீ. தூரத்துக்கான படகு சேவையை தொடங்கி வைத்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.