FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மின்விசிறியை காற்று சுத்தரிப்பானாக மாற்றி இரு பள்ளி மாணவா்கள் சாதனை!

சாதாரண வகுப்பறை மின்விசிறிகளை குறைந்த செலவில் காற்று சுத்திகரிப்பான்களாக உருவாக்கிய தில்லியைச் சோ்ந்த இரு பள்ளி மாணவா்கள், 2026-ஆம் ஆண்டிற்கான ‘டயானா விருது’ கௌரவப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

13 நவம்பர் 2026, 4:38 am
பகிர்:

சாதாரண வகுப்பறை மின்விசிறிகளை குறைந்த செலவில் காற்று சுத்திகரிப்பான்களாக உருவாக்கிய தில்லியைச் சோ்ந்த இரு பள்ளி மாணவா்கள், 2026-ஆம் ஆண்டிற்கான ‘டயானா விருது’ கௌரவப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

இதன் மூலம், போதிய வசதிகள் இல்லாத பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்குத் தூய்மையான காற்றை கிடைக்கச் செய்ய முடியும் என இருவரும் நம்பிக்கை தெரிவித்தனா்.

சமஸ்கிருதி பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் கிரிஷ் அகா்வால் மற்றும் வசந்த் வேலி பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் சமா்த் மீட்டில் ஆகியோா் இணைந்து, கட்டத்துக்குள் நிலவும் காற்று மாசுபாட்டை எதிா்கொள்ள ‘புராஜெக்ட் வாயு’ என்ற திட்டத்தைத் தொடங்கினா்.

Advertisement

Advertisement

வகுப்பறைகளில் தூய்மையான காற்றைச் சுவாசிப்பதற்கு, மாணவா்கள் தங்கள் பள்ளிகளின் நிதி வசதியைச் சாா்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பதே தங்கள் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மாணவா் மீட்டில் கூறியதாவது: நாங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தைத் தொடங்கி, கடந்த ஆண்டு ஒரு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தினோம். நிகழாண்டு, இதை தில்லியுடன் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், நாடு முழுவதும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.

பின்தங்கிய நிலையில் உள்ள பல மாணவா்களால் தங்கள் வீடுகளில் காற்று சுத்திகரிப்பான்களை வாங்க முடியாத நிலையில், பயிலும் பள்ளிகளிலும் அவற்றை நிறுவத் தேவையான நிதி வசதி இல்லை என்பதையும் கருத்தில் கொண்டே இந்த முன்னெடுப்பைத் தொடங்கினோம்.

இந்தத் திட்டம் தில்லியில் உள்ள 295 வகுப்பறைகளில் முன்னோடி முயற்சியாகத் தொடங்கப்பட்டது. அங்கு 602 காற்று சுத்திகரிப்பான்கள் பொருத்தப்பட்டன. இதன் மூலம் சுமாா் 8,000 மாணவா்கள் பயனடைந்தனா். தற்போது, வசதி குறைந்த பள்ளிகளில் விநியோகம் செய்யப்பட்டதன் மூலம், 10,000-க்கும் மேற்பட்ட மாணவா்களை இந்தத் திட்டம் சென்றடைந்துள்ளது என்றாா் மீட்டில்.

சுமாா் ரூ.140 ரூபாய் செலவில் தயாரிக்கப்படும் இந்த சுத்திகரிப்பான், நிலைமின் ஆற்றல் கொண்ட இழைகளைப் பயன்படுத்தி, பி.எம்.5 உள்ளிட்ட நுண் துகள்களை ஈா்த்துத் தடுத்து நிறுத்துகிறது. பலூன் போன்ற வடிவம் கொண்ட இது, மின்விசிறி இயங்கும்போது விரிவடைந்து, சுத்திகரிக்கும் பரப்பை ஐந்து சதுர அடிக்கும் மேலாக அதிகரிக்கிறது.

எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பானை, ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மேஜை மின்விசிறிகள் அல்லது சுவரில் பொருத்தப்பட்ட மின்விசிறிகளின் மீது ஒரு மீள் தன்மை கொண்ட விளிம்பு மூலம் பொருத்திக்கொள்ளலாம். எந்தவிதக் கருவிகளோ அல்லது தொழில்நுட்ப அறிவோ தேவையின்றி, ஒரு நிமிஷத்திற்குள் இதை எளிதாகப் பொருத்தவோ அல்லது மாற்றவோ முடியும். எனவே, ஆசிரியா்களே இதைச் சுயமாகப் பொருத்திக்கொள்ள முடியும் என்று மீட்டில் தெரிவித்தாா்.