ரஜௌரியில் பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைப்பவருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம்
பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைப்பவருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம் குறித்து...
ரஜௌரி: ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைத்து வரும் முகமது அர்ஷத் என்பவருக்கு சொந்தமான ரூ. 81 லட்சம் மதிப்பிலான சொத்தை வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முடக்கியுள்ளது.
2011 இல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாதத் தொடர்புடைய வழக்கின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டம் தானாமண்டி பகுதியில் உள்ள கப்லான் கிராமைத்தை சேர்ந்த நூர் ஹுசைன் மகன் முகமது அர்ஷத் என்பவருக்குச் சொந்தமானது. முடக்கப்பட்ட சொத்தின் மதிப்பு ரூ.81 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 87, 88-வது பிரிவுகள் மற்றும் வெளியேறுதல் மற்றும் உள்நாட்டு நடமாட்ட கட்டுப்பாடு அவசரச் சட்டத்தின் 2, 3-வது பிரிவுகளின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
முகமது அர்ஷத் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுப்பாட்டுக் கோட்டை சட்டவிரோதமாகக் கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தப்பிச் சென்றவர்.
இந்த ஆண்டு ரஜௌரி காவல்துறை பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் கட்டமைப்பைச் சிதைக்கவும், தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதச் செயல்களை ஒருங்கிணைக்கும் 10 நபர்களுக்குச் சொந்தமான, பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முடக்கியுள்ளது.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் தங்கமார்க்கில் உள்ள படேர்கூட் வனப்பகுதியில் பாரமுல்லா காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய ஒருவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு கையெறி குண்டுகளைக் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, அவர் அளித்த தகவலின் அடிப்படையில், வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு கையெறி குண்டையும் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்துக் கைப்பற்றியதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர், தங்கமார்க்கின் படேர்கோட் பகுதியைச் சேர்ந்த குலாம் ஜீலானி ரிஷி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தங்கமார்க் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள் எங்கிருந்து வந்தன, அவை எதற்காகப் பயன்படுத்தப்பட இருந்தன மற்றும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.