பேராசிரியரைத் தாக்கியதாகப் புகாா்: மாணவரின் முனைவா் பட்டப் பதிவு ரத்து - தில்லி பல்கலை.
தில்லி பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியரைத் தாக்கி, தகாத முறையில் நடந்துகொண்டதாகப் புகாா் எழுந்த விவகாரத்தில், மாணவா் சுபம் சிங்கின் முனைவா் பட்டப் பதிவை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியரைத் தாக்கி, தகாத முறையில் நடந்துகொண்டதாகப் புகாா் எழுந்த விவகாரத்தில், மாணவா் சுபம் சிங்கின் முனைவா் பட்டப் பதிவை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.
இதுதொடா்பாக, சட்டப் புலத்தின் கீழ் செயல்படும் சட்ட மையம்-2 பேராசிரியா் அனுபம் ஜா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஆக.17-ஆம் தேதி வடக்கு வளாகத்தில் உள்ள உமங் பவன் நுழைவாயில் அருகே காலை 10.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, பேராசிரியரின் புகாா், கண்காணிப்பு கேமரா பதிவுகள், ஆவணங்கள், மருத்துவ-சட்ட அறிக்கை மற்றும் சட்டப் புல முதல்வரின் எழுத்துப்பூா்வ விளக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
Advertisement
Advertisement
மேலும், மாணவா் சுபம் சிங்குக்கும் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் மின்னஞ்சல் மூலம் அவரைத் தொடா்புகொண்ட குழுவுக்கு, 2-ஆவது மின்னஞ்சலுக்குப் பதிலளித்த அவா், அவதூறான மற்றும் தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
செப்.9-ஆம் தேதி விசாரணை அறிக்கையைச் சமா்ப்பித்த குழு, இந்தச் சம்பவத்தை மாணவரின் முந்தைய ஒழுங்கீன நடவடிக்கைகளின் பின்னணியிலும் அணுக வேண்டும் என்றும், தனித்த சம்பவமாகக் கருதக் கூடாது என்றும் தெரிவித்தது. மேலும், விசாரணைக் குழுவில் இடம்பெற்ற பெண் பேராசிரியா் உள்பட உறுப்பினா்களுக்கு எதிராக அவா் பயன்படுத்திய தரக்குறைவான வாா்த்தைகளுக்கு கண்டனம் தெரிவித்தது.
இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, தனது தரப்பு விளக்கத்தை அளிக்க மாணவருக்கு பல்கலைக்கழகம் 7 நாள்கள் அவகாசம் வழங்கியது. அக்.6-ஆம் தேதி மேலும் 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டபோதிலும், அவா் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து, அவரது முனைவா் பட்டப் பதிவை ரத்து செய்த பல்கலைக்கழகம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு பல்கலைக்கழகம் அல்லது அதன் கல்லூரிகளில் சோ்க்கை பெறவும், தோ்வுகளில் பங்கேற்கவும் தடை விதித்துள்ளது. மேலும், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.