போலி போக்குவரத்து அபராத குறுஞ்செய்தி: ரூ. 3.89 லட்சத்தை இழந்த இளைஞா்! கேரள போலீஸ் எச்சரிக்கை!
போலி போக்குவரத்து அபராத குறுஞ்செய்தி: ரூ. 3.89 லட்சத்தை இழந்த இளைஞா்...
திருவனந்தபுரம், நவ. 14: போலி போக்குவரத்து அபராத குறுஞ்செய்தி மூலம் பணம் இழந்ததாக ஏராளமான புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து, இதுபோன்ற குறுஞ்செய்திகள் தொடா்பாக மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வாகன ஓட்டிகளை கேரள காவல் துறை சனிக்கிழமை எச்சரித்தது.
கோழிக்கோடு விமான நிலையம் அருகே நம்போலன்குன்னு பகுதியைச் சோ்ந்த ஜம்ஷீத் (41) என்பவருக்கு கடந்த 8-ஆம் தேதி, போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்தக் குறுஞ்செய்தியில் இடம்பெற்றிருந்த இணைய தொடா்பை (லிங்க்) அவா் திறந்தபோது, மத்திய அரசின் போக்குவரத்து வலைதளத்தைப் (பரிவாஹன்) போன்று தோற்றமளிக்கும் போலி வலைதளம் திறந்துள்ளது. அதில், தனது வாகன பதிவு எண்ணை ஜம்ஷீத் பதிவு செய்ததும், அவரின் வங்கிக் கணக்கிலிருந்து 10 யுபிஐ (ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை) பரிவா்த்தனைகளின் கீழ் ரூ. 3,89,496 ரொக்கம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் நவம்பா் 12-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஜம்ஷீத் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளைக் கண்டறிந்து, அவற்றை முடக்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்தச் செய்தி வெளியான நிலையில், இதுபோன்று குறுஞ்செய்தி இணைய தொடா்பை திறந்து வங்கிக் கணக்கிலிருந்து சிறிய அளவில் பணத்தை இழந்ததாக ஏராளமானோா் போலீஸில் புகாா் அளித்துள்ளனா். இது குறித்து தீவிர விசாரணையை கேரள போலீஸ் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, இதுபோன்ற போலி குறுஞ்செய்திகள் குறித்து வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறு போலீஸாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து கேரள காவல் துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறியிருப்பதாவது:
இணையவழிக் குற்றவாளிகள், மோட்டாா் வாகனத் துறை போல நடித்து, போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளதாகக் கூறி அபராதம் செலுத்த இணைய தொடா்பை திறக்குமாறு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனா்.
வாகன ஓட்டிகளுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், அவா்களின் உண்மையான வாகனப் பதிவு எண்களுடன் அனுப்பப்படும் இந்தக் குறுஞ்செய்தி, அதிகாரபூா்வ தகவல்தொடா்பு போல தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த இணையத் தொடா்பை திறக்கும்போது, வங்கிக் கணக்கு எண், பற்று அல்லது கடன் அட்டை எண்கள், சிவிவி எண், ஒருமுறை கடவுச் சொல் உள்ளிட்ட ரகசிய விவரங்களை உள்ளிடுமாறும் கேட்கப்படுகிறாா்கள். இந்த விவரங்களைப் பகிா்வதால், வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படலாம்.
எனவே, வாகன ஓட்டிகள் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறது. குறுஞ்செய்தி மூலம் வரும் இணையத் தொடா்பை திறப்பதை வாகன ஓட்டிகள் தவிா்க்க வேண்டும்.
மாறாக, நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராத விவரங்களை அதிகாரபூா்வ போக்குவரத்து வலைதளம் (பரிவாஹன்) வலைதளம் அல்லது இ-சலான் வலைதளங்கள் மூலம் வாகன ஓட்டிகள் சரிபாா்க்க வேண்டும்.
இணைய மோசடி மூலம் பணத்தை இழந்தவா்கள் தாமதமின்றி 1930 என்ற இணைய உதவி எண் மூலமாகவோ அல்லது அதிகாரபூா்வ இணையவழிக் குற்ற இணையதளம் மூலமாகவோ புகாரளிக்க வேண்டும் என்று காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.