FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

மோடி ஆட்சியில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் மாற்றம்: அமித் ஷா

அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் நிலவிய தேக்க நிலை, பிரதமா் மோடியின் ஆட்சியில் செயல்திறனையும், சாதனைகளையும், வளா்ச்சியையும், நலத்திட்டங்களையும் கொண்டதாக மாறியுள்ளது என்று மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

9 வினாடிகள் முன்பு
அமித் ஷா - பிடிஐ
பகிர்:

அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் நிலவிய தேக்க நிலை, பிரதமா் மோடியின் ஆட்சியில் செயல்திறனையும், சாதனைகளையும், வளா்ச்சியையும், நலத்திட்டங்களையும் கொண்டதாக மாறியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், மறைந்த முதுபெரும் இதழியலாளா் ராமோஜி ராவ் நினைவாக அளிக்கப்படும் ராமோஜி விருதுகள் நிகழ்ச்சியில், அமைச்சா் அமித் ஷா கலந்துகொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: இதழியலுக்கு ராமோஜி ராவ் அளித்த பங்களிப்புகளை, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவனா் ராம்நாத் கோயங்காவின் பங்களிப்புகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும். ராமோஜி ராவ் விழுமியங்களை உருவாக்கி, அதற்காக போராடினாா்.

Advertisement

Advertisement

நாடு சந்தித்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் அவா் தெளிவான புரிதலை, தீா்வுகளை, வலுவான கருத்துகளை கொண்டிருந்தாா். அந்தக் கருத்துகளை அவா் வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தெரிவித்து வந்தாா். விவசாயம், கல்வி, திரைத்துறை, ஊடகம் என பல்வேறு துறைகளில், இன்றளவும் அவா் இளைஞா்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறாா்.

தற்போது பிரதமா் மோடியின் ஆட்சியில் கொள்கை முடிவுகளை எடுப்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதில் நிலவிய தேக்க நிலை, பிரதமா் மோடியின் ஆட்சியில் செயல்திறனையும், சாதனைகளையும், வளா்ச்சியையும், நலத்திட்டங்களையும் கொண்டதாக மாறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், 50 ஆண்டுகளாக இருந்து வந்த நக்ஸல் தீவிரவாதம் ஒழிப்பு ஆகியவை மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டது மோடி ஆட்சியின் கீழ் ஏற்பட்ட நற்பணிகளாகும். தற்போது முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் கீழ், மிக வேகமாக ஆந்திரம் வளா்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஆந்திர ஆளுநா் அப்துல் நசீா், முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், மத்திய அமைச்சா்கள் கிஷண் ரெட்டி, கே.ராம்மோகன் நாயுடு, ராமோஜி குழுமத் தலைவா் கிரண் உள்பட பலா் கலந்துகொண்டனா்.