திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்! மத்தியப் படைகளைக் கோரும் தேர்தல் ஆணையம்!
பாதுகாப்புப் பணியில் மத்திய ஆயுதப் படைகளைக் களமிறக்கத் கோரிக்கை விடுத்துள்ள பற்றி..
திரிபுராவில் நவம்பர் 27ல் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் மத்திய ஆயுதக் காவல் படையினரை பணியமர்த்த ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் திரிபுரா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகர்தலா மாநகராட்சி உள்பட மாநிலத்திலுள்ள 16 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நவம்பர் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்.
Advertisement
Advertisement
மாநிலத்திலுள்ள மொத்தம் 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 5 இடங்களில் பாஜக ஏற்கெனவே போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புச் சூழலை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, தேர்தலின்போது போதுமான பாதுகாப்பை உறுதிசெய்ய 25 கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படையினரை மாநிலக் காவல் துறை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் இதுகுறித்துப் பேசுமாறு மாநில அரசிடம் நாங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையச் செயலாளர் அனுராக் சென் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
மாநிலக் காவல் துறை, திரிபுரா மாநிலத் துப்பாக்கிப் படை மீது மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்காமல், மத்திய ஆயுதக் காவல் படையின் உதவியுடன் பாதுகாப்பைப் பலப்படுத்த தேர்தல் ஆணையம் விரும்புவதாக அவர் கூறினார்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த ஏதுவாக, தேர்தல் பணி வாக்குப்பதிவு முறைக்கு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வசதியின் மூலம், தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிர்வாக அதிகாரிகள், காவல் துறையினர், திரிபுரா மாநிலத் துப்பாக்கிப் படை வீரர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் பயனடைவார்கள்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள கேமராமேன்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் இந்த சிறப்பு ஏற்பாட்டின் மூலம் வாக்களிக்க முடியும்.
தேர்தல் செயல்முறையைக் கண்காணிப்பதற்காக 18 பார்வையாளர்களை ஆணையம் நியமித்துள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்யும் பணி நவம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.