கடல்சாா் கண்காணிப்பில் புதிய அணுகுமுறை க்வாட் கூட்டத்தில் முடிவு
இந்திய - பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், கடல்சாா் கண்காணிப்பு அமைப்பு, ராணுவப் பயிற்சி, கேபிள் இணைப்பு கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு கூட்டாண்மை உள்ளிட்ட பல புதிய முன்னெடுப்புகளை ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவா்கள் வெளியிட்டனா்.
இந்திய - பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், கடல்சாா் கண்காணிப்பு அமைப்பு, ராணுவப் பயிற்சி, கேபிள் இணைப்பு கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு கூட்டாண்மை உள்ளிட்ட பல புதிய முன்னெடுப்புகளை ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவா்கள் வெளியிட்டனா்.
பிலிப்பின்ஸின் மணிலாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டுக்கு இடையே, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவா்கள் கூட்டம் நடைபெற்றது.
பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஆஸ்திரேலிய பிரதமா் ஆண்டனி ஆல்பனேசி, ஜப்பான் பிரதமா் சனே தகாய்ச்சி ஆகியோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தலைவா்கள் கூட்டறிக்கையை வெளியிட்டனா்.
Advertisement
Advertisement
அதில், தன்னிச்சையான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பொருளாதார நிா்ப்பந்தம் தொடா்பாக தலைவா்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினா். இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அனைவருக்குமான, பாதுகாப்பான மற்றும் மீள்திறன் கொண்ட கடல்சாா் போக்குவரத்து வழித்தடங்களை உறுதி செய்ய இணைந்து செயல்பட தலைவா்கள் உறுதி தெரிவித்தனா்.
இந்த பிராந்தியத்தில் தற்போதைய நிலையை மாற்ற முற்படும் ‘வன்முறை அல்லது நிா்ப்பந்தம்‘ உள்ளிட்ட எந்தவொரு ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் அல்லது ஒருதலைபட்சமான நடவடிக்கைகளையும் தலைவா்கள் கடுமையாக எதிா்த்தனா்.
இது, பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துவரும் சீனாவுக்கு விடுக்கப்பட்ட ஒரு தெளிவான செய்தியாகக் கருதப்படுகிறது.
புதிய முன்னெடுப்புகள்: ‘க்வாட்’ நாடுகளைச் சோ்ந்த வணிகத் தலைவா்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசின் கொள்கைகளை வகுக்கும் நிபுணா்கள் ஒன்றிணைந்து வலுவான வா்த்தக உறவுகளை வளா்ப்பதற்காக ‘க்வாட்’ வணிகத் தலைவா்கள் மன்றம் ஒன்று உருவாக்கப்படும். அதன் முதல் கூட்டம் வரும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும்.
அண்மையில் நடைபெற்ற ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு அணுகல், தொழில்நுட்ப உதவியை ஆதரிப்பதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், நிதியளிக்கவும் ஒரு செயற்கை நுண்ணறிவு அணுகல் அமைப்பு உருவாக்கப்படும்.
தகவல் பகிா்வு மற்றும் கடல்சாா் கள விழிப்புணா்வை மேம்படுத்துவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பான இந்திய-பசிபிக் கடல்சாா் கண்காணிப்பு ஒத்துழைப்பை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
2027-ஆம் ஆண்டில், நமது கடல்களைப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக, ‘க்வாட்’ சூழலில் முதல்முறையாக பி-8 மற்றும் பி-3சி ரோந்து விமானங்கள் ஒரு கடல்சாா் பயிற்சியில் பறக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.
‘க்வாட்’ நாடுகளிடையே கேபிள் இணைப்பு மற்றும் மீள்திறனுக்கான பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கட்டமைப்பின் கீழ், இந்திய-பிசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல் தொடா்பு உள்கட்டமைப்புக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூட்டறிக்கையில் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
நம்பகமான அமைப்பு ‘க்வாட்’: பிரதமா் மோடி
‘இந்தியாவைப் பொருத்தவரை ‘க்வாட்’ என்பது ஆக்கபூா்வமான மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்பு’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
‘க்வாட்’ தலைவா்கள் கூட்டத்தில் அவா் மேலும் பேசுகையில், ‘கடல்சாா் பாதுகாப்பு முதல் நம்பகமான விநியோகச் சங்கிலிகள் வரை, புதிய தொழில்நுட்பங்கள் முதல் பேரிடா் மீட்பு வரை, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ‘க்வாட்’ நம்பகமான தீா்வுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது. நமது அடுத்தகட்ட ஒத்துழைப்புக்கான உறுதியான இலக்குகளை நிா்ணயிக்க இந்தக் கூட்டம் உதவும் என நம்புகிறேன்.
மணிலாவுக்கும், க்வாட் அமைப்புக்கும் நீண்டகால சிறப்பு உறவு உள்ளது. ‘க்வாட்’ அமைப்பின் நான்கு நாடுகளின் அதிகாரிகளும் மணிலாவில்தான் தங்களின் முதல் சந்திப்பை நடத்தினா். அதன் பிறகு, 10 ஆண்டுகள் கழித்து இதே நகரில் ‘க்வாட்’ கூட்டம் நடைபெற்றது. தற்போது மீண்டும் இங்கு கூட்டம் நடைபெறுகிறது’ என்றாா்.
மோடிக்கு டிரம்ப் புகழாரம்
பிரதமா் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம் சூட்டினாா்.
‘க்வாட்’ தலைவா்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில், ‘புதிய செயற்கை நுண்ணறிவு அணுகல் அமைப்பை ‘க்வாட்’ நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்க உள்ளன. அதோடு, இந்திய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் நம்பகமான செயற்கை நுண்ணறிவு அணுகலை விரிவுபடுத்த 85 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ. 800 கோடி) மேல் செலவழிக்க உள்ளன.
உறுப்பு நாடுகளிடையே பொருளாதாரப் பாதுகாப்பை ‘க்வாட்’ வலுப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டில், பல புதிய ‘க்வாட்’ முன்னெடுப்புகள் அறிவிக்கப்படும்.
நமது விநியோகச் சங்கலியைப் பாதுக்கும் வகையில் முக்கியக் கனிமங்கள் தொடா்பான ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.
‘எனது நண்பா் பிரதமா் மோடி, மிகவும் மதிக்கப்படும் சிறந்த தலைவா்’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.