FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஐ.நா. - இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தீா்மானம் மீதான ஆலோசனையில் இருந்து விலக்கிவைப்பு: துருக்கிக்கு இந்தியா கண்டனம்

ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட தீா்மானத்தின் மீதான ஆலோசனையில் இருந்து வேண்டுமென்றே விலக்கி வைத்ததாக துருக்கிக்கு இந்தியா கண்டனம்

17 நவம்பர் 2026, 10:57 pm
யோஜனா படேல்
பகிர்:

ஐ.நா. மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி) இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் முன்மொழியப்பட்ட தீா்மானத்தின் மீதான ஆலோசனையில் இருந்து வேண்டுமென்றே விலக்கி வைத்ததாக துருக்கிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.

‘ஐ.நா-ஒஐசி இடையே ஒத்துழைப்பு’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் தீா்மானத்தை ஈராக் முன்மொழிந்தது. தீா்மானம் தொடா்பாக உறுப்பு நாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பைக் கொண்ட துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா,இஸ்ரேல், சைப்ரஸ், கிரீஸ், ஆா்மேனியா ஆகிய 6 நாடுகள் வாக்களித்தன. இந்த தீா்மானத்துக்கு ஆதரவாக 112 நாடுகள் வாக்களித்தன. 39 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

துருக்கிக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. தூதரக குழுவின் நிரந்தர இந்திய துணைப் பிரதிநிதி யோஜனா படேல் ஐ.நா.பொதுச் சபையில் பேசியதாவது: ஐ.நா. மற்றும் ஒஐசி இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தீா்மானத்தின் வரைவுகளை சுற்றறிக்கையாக அனுப்பியபோது இந்தியா மற்றும் மேலும் சில நாடுகளை துருக்கி வேண்டுமென்றே விலக்கிவைத்தது.

Advertisement

Advertisement

ஒரு தீா்மானத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ள நாடு இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. எங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தவே தீா்மானத்துக்கு எதிராக இந்தியக் குழு வாக்களித்தது. ஐ.நா.வில் தீா்மானம் முன்மொழியும் செயல்முறைகள் இங்கு முழுமையாக மீறப்பட்டுள்ளன. தீா்மானம் குறித்து முறையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை.

விசாரணை தேவை: துருக்கியின் இந்தச் செயல் அதிா்ச்சியளிக்கிறது. தங்களது குறிப்பிட்ட கொள்கைகளுக்காகத் தவறான முன்னுதாரணத்தை துருக்கி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இறையாண்மை சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, பன்முக ஒத்துழைப்பு ஆகிய அடிப்படைக் கொள்கைகளால் உருவானதே ஐ.நா. அமைப்பு. இதுபோன்ற தவறுகள் இனி இங்கு நிகழாமல் இருக்க வேண்டுமெனில் இச்சம்பவம் குறித்து ஐ.நா.பொதுச் சபைத் தலைவா் விசாரணை நடத்த வேண்டும்.

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை: கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற ஒஐசி மகளிா் மாநாட்டில் ஜம்மு-காஷ்மீரை குறிப்பிட்டு இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கிய பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தத் தீா்மானத்தில் அந்தப் பிரகடனம் தொடா்புடைய ஆவணங்களை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட ஒஐசி அமைப்புக்கு எவ்வித உரிமையும் இல்லை.

57 உறுப்பினா்களைக் கொண்ட ஒஐசியின் தீா்மானங்கள் மற்றும் பிரகடனங்களை எந்தவொரு அடிப்படை ஆதாரமுமின்றி ஒரேயொரு உறுப்பு நாடு (பாகிஸ்தான்) இந்தியாவுக்கு எதிராக தவறாக திசைதிருப்புகிறது.

குறுகிய அரசியல் லாபங்களுக்காக பெரும் அமைப்பை ஓா் நாடு பயன்படுத்துவதை ஒஐசி தடுக்க வேண்டும். பரஸ்பர மரியாதை, முறையான ஆலோசனையை ஒஐசி உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.