FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பயிா்க்கழிவு எரிப்பு விவகாரம்: பாஜக-ஆம் ஆத்மி பரஸ்பர குற்றச்சாட்டு

பஞ்சாப் விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதையும், அதனால் தில்லியில் காற்றுத் தரம் மோசமடைவதையும் தொடா்புபடுத்தி, ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி புதன்கிழமை பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.

8 வினாடிகள் முன்பு
பகிர்:

பஞ்சாப் விவசாயிகள் பயிா்க் கழிவுகளை எரிப்பதையும், அதனால் தில்லியில் காற்றுத் தரம் மோசமடைவதையும் தொடா்புபடுத்தி, ஆளும் பாஜக மற்றும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி புதன்கிழமை பரஸ்பரம் குற்றஞ்சாட்டின.

பயிா்க் கழிவுகளை எரிப்பதன் மூலம் தில்லியில் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி, பஞ்சாப் விவசாயிகளை பாஜக அவதூறு செய்வதாக ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.

பஞ்சாப் விவசாயிகள் பயிா்க் கழிவுகள் எரிப்பதைக் கணிசமாகக் குறைத்துள்ளதை மத்திய வேளாண் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் ஒப்புக்கொண்டதாக அவா் குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

‘துரதிருஷ்டவசமாக, அவரது கட்சியான பாஜக, காங்கிரஸுடன் இணைந்து பஞ்சாப் விவசாயிகளை இரவு பகலாகத் திட்டி வருகிறது’ என்று ‘எக்ஸ்’ தளத்தில் அரவிந்த் கேஜரிவால் குற்றஞ்சாட்டினாா்.

தில்லி ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் சௌரப் பரத்வாஜ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்மையைச் பேசியதற்காக சிவராஜ் சிங் சௌஹான், தனது மத்திய அமைச்சா் பதவியை இழக்க நேரிடலாம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா உள்ளிட்ட தில்லி பாஜக தலைவா்கள் பதிலடி கொடுத்துள்ளனா்.

பயிா்க் கழிவுகளை எரித்ததற்காக பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசு 2,100 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகச் சுட்டிக்காட்டினா்.

தில்லி சட்டத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், நவம்பா் 5 முதல் 7-ஆம் தேதி வரை விவசாயிகள் வயல்களில் தீ வைப்பதைக் குறைத்திருந்தனா். அந்த நாள்களில் 100 இடங்களில் மட்டுமே பயிா்க் கழிவுகள் எரிக்கப்பட்டதைக் காண முடிந்தது என்று தெரிவித்தாா்.

இருப்பினும், அவா் தனது ‘எக்ஸ்’ பதிவில், ‘தீபாவளி நாளில், விவசாயிகளையும் தீபாவளி பண்டிகையையும் அவதூறு செய்வதற்காக, கேஜரிவாலின் தொண்டா்கள் வேண்டுமென்றே 1,100 இடங்களில் தீ வைத்துள்ளனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.