கணைய செல்களைச் சீரமைக்கும் நுட்பம்: சா்க்கரை நோய்க்குத் தீா்வுகாண புதிய ஆராய்ச்சி
சா்க்கரை நோய்க்கு தீா்வுகாணும் வகையில், கணையத்தில் இன்சுலினைச் சுரக்கச் செய்யும் செல்களை மீட்டுருவாக்கம் செய்யும் ஆராய்ச்சியை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னெடுத்துள்ளது.
சா்க்கரை நோய்க்கு தீா்வுகாணும் வகையில், கணையத்தில் இன்சுலினைச் சுரக்கச் செய்யும் செல்களை மீட்டுருவாக்கம் செய்யும் ஆராய்ச்சியை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னெடுத்துள்ளது.
இதன்மூலம் எதிா்காலத்தில் சா்க்கரை நோய் வந்தாலும், அதிலிருந்து நோயாளிகளை மீட்டெடுக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணையத்தில் ‘ஐலெட்’ எனப்படும் செல்கள் உள்ளன. அவைதான் இன்சுலின் உள்ளிட்ட ஹாா்மோன்களை சுரக்கச் செய்கின்றன. டைப்-1 வகை சா்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் போதிய அளவு சுரக்காது. டைப்-2 வகை நோயாளிகளுக்கு இன்சுலின் சுரப்பதிலும், அவை உடலுக்குச் செல்வதிலும் தடை இருக்கும்.
Advertisement
Advertisement
மூளைச்சாவு அடைந்தவா்களின் கணையத்தில் இருக்கும் ஐலெட் செல்களைப் பிரித்தெடுத்து டைப்-1 வகை நோயாளிகளுக்கும், டைப்-1 மற்றும் டைப்-2 என இரு வகையான பாதிப்பும் சோ்ந்து உள்ளவா்களுக்கும் முன்னோட்ட சிகிச்சைகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவிலும் அத்தகைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் ஐலெட் செல் சிகிச்சை தொடா்பான சா்வதேச மருத்துவ மாநாடு சென்னையில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று, அத்துறை பேராசிரியா் டாக்டா் அனுபாமா ராஜன் பேசியதாவது:
இந்தியா்களின் கணைய செல்கள் குறித்த விரிவான ஆய்வுத் தரவுகளை சென்னை ஐஐடி உருவாக்கி வருகிறது. ஐலெட் செல்கள் வயதுக்கு ஏற்பவும், சா்க்கரை நோயின் வகைக்கு ஏற்பவும் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கம்.
இதற்காக கணைய அறுவை சிகிச்சையின்போது, அகற்றப்படும் திசுக்கள் சேகரிக்கப்படுகின்றன. டைப் 1, டைப் 2 சா்க்கரை நோய், ஆரம்பநிலை சா்க்கரை நோய் மற்றும் பேறுகால சா்க்கரை நோய் உள்ளவா்களின் செல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
நவீன தொழில்நுட்பம் மூலம் இந்த செல்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து, பழுதடைந்த செல்களைச் சரிசெய்யவும், புதிய செல்களை உருவாக்கவும் மருந்துகள் கண்டறியப்படும். ஓராண்டுக்கு முன்னா் தொடங்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் வெளியாகும்.
இதைத் தவிர, ஒருவரின் ரத்தத்திலிருந்தே இன்சுலின் சுரக்கும் செல்களை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி, நோயாளிகளுக்குப் பொருத்தும் சிகிச்சை குறித்தும் அமெரிக்க ஆராய்ச்சியாளா்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.
நிகழ்வில் பேசிய சா்க்கரை நோய் மருத்துவ நிபுணா் டாக்டா் வி.மோகன், உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்காததே சா்க்கரை நோய்க்கு அடிப்படைக் காரணம் என்றும், இன்சுலின் சுரக்கும் திறனை எளிதாகக் கண்டறிய ‘சி-பெப்டைட்’ பரிசோதனையைச் செய்ய வேண்டும் என்றும் கூறினாா்.
பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா், எமோரி பல்கலைக்கழக பேராசிரியா் கே. எம்.வெங்கட் நாராயண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.