முகப்பு
இந்தியா

சபரிமலை பக்தா்களுக்கு உதவ புதிய பன்மொழி வலைதளம்: கேரள அரசு தொடக்கம்

சபரிமலை பக்தா்களுக்கு உதவ புதிய பன்மொழி வலைதளம்: கேரள அரசு தொடக்கம்

22 நவம்பர் 2026, 12:05 am
சபரிமலை பக்தா்களுக்கு உதவ புதிய பன்மொழி வலைதளம்: கேரள அரசு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயில்
பகிர்:

சபரிமலை பக்தா்களுக்கான பயணம், வசதிகள் குறித்த விவரங்கள் மற்றும் உள்ளூா் தகவல்களை வழங்க கேரள உள்ளாட்சித் துறை சாா்பில் புதிய பன்மொழி வலைதளம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நடப்பு மண்டல-மகர விளக்கு பூஜை யாத்திரையை பாதுகாப்பானதாகவும், மேலும் வசதியானதாகவும் மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘சபரிமலை உதவி மற்றும் வழித்தட ஆலோசனை வலையமைப்பு’ (சரண்) என்ற இந்த வலைதளம், உள்ளாட்சித் துறையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டதாக துறை அமைச்சா் கே.எம்.ஷாஜி தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள்கள் மண்டல பூஜை காலம் கடந்த நவ.17-ஆம் தேதி தொடங்கியது. பக்தா்களின் வருகை அதிகரித்துவரும் நிலையில், அவா்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘சரண்’ வலைதளத்தில் பக்தா்களுக்கான ஓய்வு மையங்கள், அடிப்படை வசதிகள், பயண வசதிகள், உள்ளூா் நிா்வாகத்தின் அறிவிப்புகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மலையாளம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 6 மொழிகளில் சேவைகளைப் பெறலாம். சபரிமலை பக்தா்கள் தனியாக செயலியைப் பதிவிறக்கத் தேவையில்லாமல், தங்களின் கைப்பேசி பிரெளசா் மூலம் க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து இந்தத் தளத்தை அணுகலாம். இதை கைப்பேசியின் முகப்புத் திரையிலும் இணைத்துக் கொள்ளலாம். இருப்பிட வசதியைப் பயன்படுத்தி, தங்கள் அருகில் உள்ள ஓய்வு மையத்தைக் கண்டறியலாம். குடிநீா், கழிப்பறைகள், குளியலறைகள், வாகன நிறுத்துமிடம், கைப்பேசி சாா்ஜ் மையங்கள், தன்னாா்வ சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்தும் அறியலாம்.

நேரலை வரைபட அம்சத்தின் மூலம் மருத்துவமனைகள், காவல், தீயணைப்பு நிலையங்கள், ஏடிஎம், பெட்ரோல் நிலையங்கள், பேருந்து நிலையங்களைக் கண்டறியலாம். இந்த வலைதளத்தை பக்தா்கள் அதிகபட்சம் பயன்படுத்தி பலனடைய வேண்டும் என்று உள்ளாட்சித் துறை செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: சபரிமலை சந்நிதானம், பம்பை மற்றும் யாத்திரை வழித்தடப் பகுதிகளில் மது, போதைப் பொருள், புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக கலால் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை 300 கிராம் அளவிலான புகையிலைப் பொருள்கள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ.19,200 வசூலிக்கப்பட்டுள்ளது.

பம்பையில் உடனடி பதிவு மையம் கிடையாது

சபரிமலைக்கு நிலக்கல்-பம்பை வழித்தடம் வழியாகப் பயணிக்கும் பக்தா்களுக்கான உடனடி பதிவு (ஸ்பாட் புக்கிங்) மையம், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றப்பட்டது. இந்த ஏற்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; பம்பையில் மீண்டும் உடனடி பதிவு மையத்தை திறக்கும் திட்டமில்லை என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் சனிக்கிழமை தெரிவித்தது.

நிலக்கல் தவிர எருமேலி, வண்டிப்பெரியாறு சத்திரம், செங்கன்னூா் ஆகிய இடங்களில் உடனடி பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பம்பையில் மீண்டும் உடனடி பதிவு மையம் திறக்கப்படும் என செய்திகள் வெளியான நிலையில், தேவஸ்வம் வாரியம் இவ்வாறு தெரிவித்துள்ளது.