ம.பி.யில் திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு
மத்திய பிரதேசத்தில் கிராமத் திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பற்றி...

மத்திய பிரதேசத்தில் கிராமத் திருவிழாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், பாலாகாட் மாவட்டத்தில் உள்ள ஹிரி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருவிழாவின்போது, நூடுல்ஸ்(சாவ்மெய்ன்) சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 12 பெரியவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நூடுல்ஸ் சாப்பிட்ட பலருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ஆதித்யா சிங் தெரிவித்தார்.
முதலில் 118 குழந்தைகள் கிர்னாபூரில் உள்ள சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களில் 45 பேர் மேல் சிகிச்சைக்காக பாலாகாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மீதமுள்ள 73 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவர்கள் வீடு திரும்பினர் என்று அவர் கூறினார்.
Advertisement
Advertisement
குழந்தைகளைத் தவிர, 12 பெரியவர்களும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் சிங் தெரிவித்தார். மருத்துவமனைக்கு நேரில் சென்ற ஆட்சியர், நோயாளிகளின் உடல்நிலை குறித்து விசாரித்ததுடன், அவர்களுக்குச் சரியான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
"குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்ட 45 குழந்தைகளும், பொது மருத்துவ வார்டில் அனுமதிக்கப்பட்ட 12 பெரியவர்களும் தற்போது நலமாக உள்ளனர்" என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் சத்ருகன் சிங் தஹியா தெரிவித்தார். உணவு நஞ்சானதாகக் கருதப்படும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது நலமாக இருப்பதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்.