நவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் பயங்கர தீ விபத்து
நவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள மாஃப்கோ சந்தை பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்கு தீ விபத்து குறித்து...

மகாராஷ்டிரம்: நவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள மாஃப்கோ சந்தை பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவும்(நவ.22) பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, உள்ளூர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
இந்த விபத்தால் அருகில் உள்ள கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தின்றன.
Advertisement
Advertisement
தற்போது இரண்டு கட்டடங்களுக்கு தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரம் மாநிலம் நவி மும்பையின் துர்பே பகுதியில் உள்ள மாஃப்கோ சந்தை பகுதியில் அமைந்துள்ள ஒரு கேரேஜ் மற்றும் எண்ணெய் கிடங்குடன் கூடிய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீயால் கிடங்கிற்குள் வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் வேதிப்பொருள்கள்(தின்னர்) அடங்கிய பீப்பாய்கள் வெடித்ததால் தீ மளமளவெனப் கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி, அருகில் இருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.
தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். தீ விபத்து ஏற்பட்ட வளாகம் கேரேஜ் மற்றும் எண்ணெய் கிடங்கு என்பதால் உள்ளே வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள்கள் இருந்த பீப்பாய்கள் திடீரென வெடித்து சிதறியதால் தீயைக் கட்டுக்கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
பல தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தொடர்ந்து போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து திங்கள்கிழமை(நவ.23) காலை முதல் அந்த பகுதியில் குளிரூட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவருக்கு 5 முதல் 6 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நல்வாய்ப்பாக, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும்் ஆள்நாடமாட்டம் குறைவாக இருந்ததாலும் பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.
கிடங்கின் உரிமையாளர் தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று துணை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.