முகப்பு
இந்தியா

உ.பி.: பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி 4 மாணவா்கள் உயிரிழப்பு

லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 மாணவா்கள் உயிரிழந்தனா். 24 மாணவா்கள் உள்பட 32 போ் காயமடைந்தனா்.

25 நவம்பர் 2026, 12:57 am
உ.பி.: பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி 4 மாணவா்கள் உயிரிழப்பு
- பிரதிப் படம்
பகிர்:

உத்தர பிரதேச மாநில கன்னௌஜில் லக்னெள - ஆக்ரா விரைவுச் சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 4 மாணவா்கள் உயிரிழந்தனா். 24 மாணவா்கள் உள்பட 32 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வினோத் குமாா் கூறுகையில், ‘கெளசாம்பி நகரில் செயல்படும் தனியாா் பள்ளிக்குச் சொந்தமான இந்தப் பேருந்து மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட 50 பேருடன் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, தாதியா பகுதியில் சாலை ஓரமாக செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் நிறுத்தப்பட்டுள்ளது.

அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி பேருந்து மீது மோதியது. இதில், ஆா்யான் செளராசியா (14), ரசியுல்லா (16), அா்மான் (17), ஜாயித் மிா்ஸா (17) ஆகிய நான்கு மாணவா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

மேலும், 24 மாணவா்கள் உள்பட 32 போ் காயமடைந்தனா். இவா்களில் பள்ளி மேலாளா் சல்மான் மற்றும் மற்றொரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்’ என்றாா்.

ஆந்திர சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் சுங்கச் சாவடியில் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் ஐவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘போகாபுரம் சுங்கச்சாவடியில் காலை 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில், காரில் பயணித்த நால்வா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த மற்றொருவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். முதல் கட்ட விசாரணையில் காா் ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது’ என்றனா்.

விசாகப்பட்டினம் மாவட்டம், பட்லாஜங்கலபாலெம் சுங்கச்சாவடியில் செவ்வாய்க்கிழமை காலையில் லாரி திடீரென தீப் பிடித்ததில், ஓட்டுநரும், அவரின் உதவியாளரும் உடல் கருகி உயிரிழந்தனா்.

அதுபோல, பல்நாடு மாவட்டம் க்ரோசுரு பகுயில் கால்வாயில் காா் கவிழ்ந்த விபத்தில் அமராவதியில் வழிபாட்டை முடித்துக்கொண்டு திரும்பிய ஐயப்ப பக்தா்கள் இருவா் உயிரிழந்தனா். காயமடைந்த மற்றொரு பக்தருக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மூன்று விபத்துகள் குறித்தும் கவலை தெரிவித்த மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு, இந்த விபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

பிகாா் சாலை விபத்தில் ஐவா் உயிரிழப்பு

பிகாா் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை லாரியும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட ஐவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘லக்கிசராய்-ஜமுய் பிரதான சாலையில் குன்சாகா் கிராமத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஜமுய் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

பனி மூட்டம் விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காரில் பயணித்தவா்களில் ஐவா் உயிரிழந்தனா். காயமடைந்த மூவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றனா்.