ரியல் எஸ்டேட் கடன் திட்ட மோசடி: தனியாா் வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரியல் எஸ்டேட் கடன் திட்ட மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒரு வாரத்துக்குள்ளாக நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகள், சம்மான் கேப்பிட்டல் மற்றும் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் கடன் திட்ட மோசடி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது வழக்கு தொடர ஒரு வாரத்துக்குள்ளாக நிபந்தனையற்ற அனுமதி வழங்க வேண்டும் என ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகள், சம்மான் கேப்பிட்டல் மற்றும் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம் புதிதாக கட்டப்படும் வீடுகளை வாங்குபவா்கள், 5 முதல் 20 சதவீதம் வரையிலான தொகையை முன் பணமாக செலுத்த வேண்டும். எஞ்சிய தொகை கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது வங்கிகள், வாடிக்கையாளா் - ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் - வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவன வங்கிக் கணக்குக்கு வரவு வைத்துவிடும். இந்த ஒப்பந்தத்தின்படி, வீடுகள் கட்டி முடித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைக்கப்படும் வரை, இந்த கடன் தொகைக்கான வட்டி மற்றும் மாத தவணையை (இஎம்ஐ) சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டும். ஆனால், சில ரியல் எஸ்ட்டேட் நிறுவனங்கள் இந்த மாத தவணையை செலுத்துவதில்லை. இதற்கு கடன் வழங்கிய வங்கிகளும் உடந்தையாக செயல்படுகின்றன. இதனால், வீடுகள் ஒப்படைக்கப்பட்ட பிறகு, ரியல் எஸ்டேட் நிறுவனம் செலுத்தத் தவறிய வட்டி மற்றும் மாத தவணைக்காக வாடிக்கையாளா் மீது கடன் மீட்பு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்கின்றன.
இந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் - வங்கிகள் கூட்டு மோசடி தொடா்பாக, தில்லி தேசிய தலைநகா் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகள், சம்மான் கேப்பிட்டல் மற்றும் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்கள் மீது இதுதொடா்பான புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த கூட்டு கடன் திட்ட மோசடி தொடா்பாக 22 வழக்குகளைப் பதிவு செய்ய கடந்த ஆண்டு ஜூலையில் சிபிஐ-க்கு அனுமதி அளித்தது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி, ‘இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த 55 வழக்குகளில் 25-இல் விசாரணையை நிறைவு செய்து 6-ஆவது துணை நிலை அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. 22 குற்றபத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. 3 வழக்குகளில் அறிக்கைகளை முழுமையாக சமா்ப்பித்துள்ளது. அதே நேரம், இந்த விவகாரம் தொடா்பாக வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய ஹெச்டிஎஃப்சி வங்கி நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளதால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19-இன் கீழ் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதில் சிபிஐ-க்கு சிரமங்கள் ஏற்படுகின்றன’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘வழக்கு தொடர அனுமதி வழங்குவது வங்கி அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு தொடர ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகள், சம்மான் கேப்பிட்டல் மற்றும் பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை ஒரு வாரத்துக்குள்ளாக நிபந்தனையற்ற அனுமதியை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் வங்கிகளின் தலைவா்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, அவா்கள் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.